செய்திகள் :

புல்வாமா தாக்குதலில் மோடி அரசைக் குற்றம்சாட்டிய J&K Ex ஆளுநர் மறைவு; யார் இந்த சத்யபால் மாலிக்?

post image

ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தாக்குதலின்போதும், மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை பாஜக அரசு நீக்கியபோதும் அங்கு ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் (79) இன்றுகாலமானார்.

கிட்னி தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்திருக்கிறார்.

சத்யபால் மாலிக்
சத்யபால் மாலிக்

மாணவர் சங்க தலைவர் டு நாடாளுமன்ற எம்.பி!

இந்தியா சுதந்திரமடைவதற்கு ஓராண்டு முன்பு 1946 ஜூலை 24-ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் ஹிசாவாடா கிராமத்தில் சத்யபால் மாலிக் பிறந்தார். ஜாட் சமூகத்தைச் சேர்ந்த இவர் மீரட் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி மற்றும் எல்.எல்.பி முடித்தார். இவரின் அரசியல் பயணமானது, பட்டப்படிப்பு சமயத்தில் 1968-69ல் மாணவர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதே தொடங்கிவிட்டது.

1974 சட்டமன்றத் தேர்தலில், அப்போதிருந்த முன்னாள் முதல்வர் சரண் சிங்கின் பாரதிய கிராந்தி தளம் கட்சியின் சார்பில், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்ட சத்யபால் மாலிக், 41 சதவிகித வாக்குகள் பெற்று முதல்முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.

பின்னர், இக்கட்சி பாரதிய லோக் தளமாக மாற்றப்பட்ட பிறகு அதன் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

இக்கட்சியானது, 1977 பொதுத் தேர்தலில் இந்திராகாந்தியின் எமெர்ஜென்சியை எதிர்த்த பல்வேறு கட்சிகளின் ஒன்றிணைப்பால் உருவான ஜனதா கட்சியில் அங்கம் வகித்தது.

1975-ல் இந்திரா காந்தியை பதவி விலக வலியுறுத்தி போராட்டம்
1975-ல் இந்திரா காந்தியை பதவி விலக வலியுறுத்தி போராட்டம்

அதுவரை மாநில அரசியலில் இருந்த சத்யபால் மாலிக், 1980-ல் ராஜ்ய சபா எம்.பி-யாக நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார்.

1989 வரை ராஜ்ய சபாவில் எம்.பி-யாக இருந்த இவர், 1989 மக்களவைத் தேர்தலில் ஜனதா தளம் கட்சியின் சார்பில் அலிகார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதைத்தொடர்ந்து, 1991 மக்களவைத் தேர்தலில் அதே அலிகார் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட்ட சத்யபால் மாலிக் வெறும் நாற்பதாயிரம் வாக்குகள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.

அதற்குப் பிறகு அவர் எந்தத் தேர்தலிலும் போட்டியிடவில்லை.

ஆளுநர் பதவியும்... புல்வாமா தாக்குதலும்!

2012-ல் பா.ஜ.க-வின் தேசிய துணைத் தலைவராக சத்யபால் மாலிக் நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, 2017 செப்டம்பரில் பீகார் ஆளுநராகவும், 2018 மார்ச்சில் கூடுதலாக ஒடிசாவின் ஆளுநராகவும் பொறுப்பேற்றார்.

அங்கிருந்து, 2018 ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு ஆளுநராக மாற்றப்பட்டார்.

இவர் ஆளுநராகப் பதவி வகித்த காலத்தில்தான், 2019-ல் மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் பிப்ரவரியில் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது.

அந்தத் தீவிரவாத தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (CRPF) 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதையடுத்து, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றதும், ஆகஸ்டில் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாநிலம் துண்டாடப்பட்டது.

பின்னர், 2019 நவம்பரில் ஜம்மு காஷ்மீரிலிருந்து கோவாவுக்கு ஆளுநராக மாற்றப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, கடைசியாக 2020 ஆகஸ்டில் மேகாலயாவுக்கு மாற்றப்பட்ட சத்யபால் மாலிக் 2022 அக்டோபர் வரை ஆளுநராகப் பொறுப்பு வகித்தார்.

வேளாண் சட்ட எதிர்ப்பில் தொடங்கிய மோதல்!

சத்யபால் மாலிக்குக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே மோதல் தொடங்கியது விவசாயிகள் போராட்டத்தில்தான்.

மேகாலயா ஆளுநராக இருந்த சமயத்தில், 2021-ல் வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டார்.

மேலும், "சீக்கியர்களை நீங்கள் வெல்ல முடியாது" என்று மத்திய அரசுக்கெதிராக குரலெழுப்பினார்.

புல்வாமா தாக்குதலில் மோடி மற்றும் பாஜக அரசு மீது பகிரங்க குற்றச்சாட்டு!

புல்வாமா தாக்குதல் பற்றி சத்யபால் மாலிக் 2023-ல் பேட்டியொன்றில் மத்திய அரசைக் குற்றம்சாட்டினார்.

அப்பேட்டியில் சத்யபால் மாலிக், "புல்வாமா தாக்குதலுக்கு உள்துறை அமைச்சகத்தின் (அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங்) அலட்சியமும், சி.ஆர்.பி.எஃப் படையின் பொறுப்பற்ற நடவடிக்கையுமே காரணம்.

சம்பவத்துக்கு முன் பாதுகாப்பு காரணமாக வீரர்களைக் கொண்டுசெல்ல ஐந்து விமானங்களை CRPF கேட்டது.

உள்துறை அமைச்சகமோ (அமைச்சராக இருந்தவர் அமித் ஷா) அதற்கு மறுத்துவிட்டது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இதனால், சாலை மார்க்கமாக வாகனத்தில் வீரர்கள் கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால், சாலையும் பாதுகாக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க உளவுத்துறையின் தோல்வி.

சம்பவத்துக்குப் பிறகு பிரதமர் மோடியிடம், `வீரர்களுக்கு விமானங்களை வழங்கியிருந்தால் இது நடந்திருக்காது. நம்முடைய தவறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடந்தது' எனக் கூறியபோது, இதுபற்றி வெளியில் பேசாமல் அமைதியாக இருங்கள் என்றார்" என பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

பாஜக-வின் எதிர்வினை!

இந்தக் குற்றச்சாட்டுக்கு முன்புதான், அவருக்கு வழங்கப்பட்டுவந்த Z+ பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப்பெற்றது.

"ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கப்பட்டபோது நான்தான் ஆளுநராக இருந்தேன். இப்போது என் உயிருக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு பா.ஜ.க தான் காரணம்" என்று சத்யபால் மாலிக் தெரிவித்திருந்தார்.

பின்னர், புல்வாமா தாக்குதல் குறித்து அவர் இப்படி பேசிய சில நாள்களில், ஆளுநராக இருந்தபோது ரூ. 300 கோடி லஞ்சம் பெற்றதாக அவருக்குத் தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

அதன்பின்னர், "2019 தேர்தல் இந்திய ராணுவ வீரர்களின் உடல்கள் மேல் நடத்தப்பட்டது" என்று காட்டமான வார்த்தைகளால் வெடித்தார் சத்யபால் மாலிக்.

சத்யபால் மாலிக்
சத்யபால் மாலிக்

இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு அமித் ஷா வழக்கம் போல பதில் கூறாமல், "ஆளுநராக இருந்தபோதே ஏன் இதை பற்றி பேசவில்லை" எனக் கேள்வியெழுப்பினார். ஆனால், அதை அவர் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற இவர், "மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அதன்பிறகு மீண்டும் வாக்களிக்கும் வாய்ப்பே கொடுக்க மாட்டார்கள்" என்று கூறி காங்கிரஸை ஆதரித்தார்.

அந்த சமயத்தில், ராகுல் காந்தி அவரை நேரில் சந்தித்தார். சமீபத்தில் கடந்த மே மாதத்தில் அவரை மருத்துவமனைக்கு சென்று அவரைச் சந்தித்தார்.

இந்த நிலையில் சத்யபால் மாலிக் இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

`தமிழகத்தில் தங்கம் விலை நிலவரத்தைப்போல கொலை நிலவரம்...' - இபிஎஸ் பேச்சு!

தமிழகத்தில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற அடிப்படையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாம... மேலும் பார்க்க

Rahul: ``மதிப்புக்குரிய நீதிபதிகள் தீர்மானிக்க மாட்டார்கள்..!" - பிரியாங்கா

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை கருத்து தெரிவித்த‌தாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது, ``கரு... மேலும் பார்க்க

TVK: "அதே பிரமாண்டத்தோடும் உற்சாகத்தோடும் நடைபெறும்" - மதுரை மாநாடு மாற்று தேதியை அறிவித்த விஜய்

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், ஆகஸ்ட் 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி என்பதால் ஆகஸ்ட் 18 முதல் 22-க்குள் மாநாடு... மேலும் பார்க்க

"இந்தியா மீதான வரி 24 மணி நேரத்தில் உயரும்" - மீண்டும் எச்சரித்த ட்ரம்ப்!

இந்தியா ஒரு நல்ல வர்த்தக நண்பர் இல்லை என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மீதான வரி கணிசமாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.சில நாள்களுக்கு முன்பு இந்தியாவின் மீது 25% வரி... மேலும் பார்க்க