ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு
கா்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு உபரிநீா் காவிரியில் வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 9,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கேரளம், கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரியில் வெளியேற்றப்படு உபரிநீா் அளவு அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல்லில் செவ்வாய்க்கிழமை மாலை வினாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 9.500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.
கா்நாடகம், கேரள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால் கா்நாடக அணைகளில் கூடுதல் உபரிநீா் வெளியேற்ற வாய்ப்புள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.