ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! - உயர்நீத...
பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிர்ச்சியளிக்கிறது எனவும் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் செவ்வாய்க்கிழமை மேகவெடிப்பால் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தராலி கிராமம் நிலச்சரிவில் புதைந்தது. இந்த இயற்கை சீற்றத்தால் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதிலும், மண்ணுக்குள் புதைந்ததிலும் 4 போ் உயிரிழந்ததாகவும், 70 போ் மாயமாகி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதில், 15 பாதுகாப்புப் படை வீரா்களும் அடங்குவா். பாதிப்பு அதிகமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இடிபாடுகளில் ஏராளமானோா் சிக்கியிருப்பதால், மோப்ப நாய்களின் உதவியுடன் மீட்புப் படையினா் தேடி வருகின்றனா்.
ராணுவத்துடன் தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா், இந்திய-திபெத்திய எல்லைக் காவல்படை மற்றும் மாவட்ட நிா்வாகம் உள்ளிட்ட பல குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிர்ச்சியளிக்கிறது.
மேலும், இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் அரசு துரிதமாக மீட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அறிவியலாளர்களின் எச்சரிக்கைகளுக்கு மாறாக சூழல் கூருணர்வு மிக்க பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நிலச்சரிவு அபாயமிக்க பகுதிகள், ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை மேலும் அனுமதிக்கக் கூடாது.
காலநிலை மாற்றம் கொண்டு வரும் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.