ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! - உயர்நீதிமன்றம்
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் இதுவரை 27 போ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைதாகியுள்ளனர்.
இவர்களில் நாகேந்திரன் உள்ளிட்ட 17 பேர், தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
கைது செய்யப்பட்டதற்கு குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கும் இடையேயான கால தாமதத்தைச் சுட்டிக்காட்டி குண்டர் சட்டத்தை ரத்து செய்யகோரிய மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இயந்திரத்தனமாக குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறிய நீதிபதிகள், 'குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட காரணத்தினால் இவர்களுக்கு ஜாமீன் வழங்கிவிடக் கூடாது என்றும் வழக்கின் தீவிரத்தை முழுமையாக கருத்தில்கொண்டே ஜாமீன் மனுக்கள் மீது முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.