இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
6.41 லட்சம் பேருக்கு வேலை: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
கடந்த 4 ஆண்டுகளில் 6 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக. 6) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
”உதவிப் பொறியாளர் - நகர அமைப்பு அலுவலர்கள் - இளநிலைப் பொறியாளர்கள் - துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்ட இந்தப் பணியிடங்களால் 2 ஆயிரத்து 538 குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியிருக்கிறது நம்முடைய திராவிட மாடல் அரசு!
கடந்த நான்கு ஆண்டுகளில் T.N.P.S.C - T.R.B - M.R.B - T.N.U.S.R.B உள்ளிட்ட தேர்வாணையங்கள் மூலமாகவும், நகராட்சி நிர்வாகம், கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை மற்றும் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் மூலமாகவும், 1 லட்சத்து எட்டாயிரத்து 111 பேருக்கு பணி நியமனம் வழங்கியிருக்கிறோம்!
திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக, “நான் முதல்வன்” திட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, 3 லட்சத்து 28 ஆயிரத்து 393 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம்! தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை மூலம் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, 2 லட்சத்து 65 ஆயிரத்து 223 பேருக்கு தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் வழங்கியிருக்கிறோம்!
முதன்முறையாக, விளையாட்டுத் துறையில், தேசிய மற்றும் உலகளவில் சாதனை படைத்திருக்கக்கூடிய தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதன்மூலம் 84 நபர்களுக்கு இந்த ஆண்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது!
நான் முதல்வன் திட்டத்தில், பயிற்சிபெற்ற 89 இளைஞர்கள் பல்வேறு முக்கிய மத்திய அரசுப் பணிகளில் இடம் பிடித்திருக்கிறார்கள்! அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தில் படித்த 18 இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது! இப்படி, மொத்தம் 6 லட்சத்து 41 ஆயிரத்து 664 பேர், கடந்த நான்காண்டுகளில், பணி நியமனம் பெற்றிருக்கிறார்கள்! இதெல்லாம், நம்முடைய தொடர் முயற்சிகளுக்கு மாணவர்களுக்கு வழங்கும் திறன் பயிற்சிகளுக்கான பலன் இது!
நாம் முன்னெடுக்கும் திட்டங்களால், தமிழ்நாடு இன்றைக்கு தொழில்வளர்ச்சியில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக இருக்கிறது!
பல்வேறு இந்திய நிறுவனங்களுக்கும், M.N.C-களுக்கும் தமிழ்நாடுதான் முதலீடுகளுக்கான Destination! கடந்த நான்கு ஆண்டுகளில், உற்பத்தி துறை, I.T. துறை, கட்டுமானத் துறை என்று பல்வேறு வகையான தொழில் நிறுவனங்கள் மேற்கொண்ட 941 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 10 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திருக்கிறார்கள்! இதனால், 2 லட்சத்து 30 ஆயிரத்து 856 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது!
இன்றைக்கு உங்களுக்கெல்லாம் பணி நியமன ஆணையை வழங்கியிருக்கிறேன்! ஏற்கெனவே, நான் சொன்னது போல, இளைஞர்களுக்கு என்னவெல்லாம் தேவையோ - அதையெல்லாம் நம்முடைய அரசு வழங்கிகொண்டு இருக்கிறது! அதில் முக்கியமானதாக சிலவற்றை சொல்ல வேண்டும் என்றால், 41 லட்சம் பேர் நான் முதல்வன் திட்டத்திலும் - 4 லட்சம் மாணவர்கள் தமிழ்ப்புதல்வன் திட்டத்திலும் - 6 லட்சம் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்திலும் பயனடைந்திருக்கிறார்கள்!
பல்வேறு மாவட்டங்களில் தோழி விடுதிகள் தொடங்கியிருக்கிறோம்! இப்படி, கல்வியைச் சுற்றியும் - அறிவைச் சுற்றியும் - ஆற்றலைச் சுற்றியும் செயல்படக்கூடிய முன்னெடுப்புகளின் வரிசையில், அடுத்து, கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி தரப்போகிறோம்!
பொதுவாக, நான் மாணவர்களிடம் பேசும்போது, “கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து” என்று சொல்லி அவர்களை ஊக்குவிப்பேன். அப்படிப்பட்ட கல்விச் செல்வத்தை பெற்று, முன்னேற்றத்திற்கான முதல் படியில் காலடி வைக்கும் இளைஞர்களான உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, “நாள்தோறும் உலகம் அப்டேட் ஆகிக்கொண்டிருக்கிறது. அதற்கு சமமாக நீங்களும் உங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
இதையும் படிக்க: விடைபெறுகிறது பதிவு அஞ்சல்! கட்டணம் அதிகரிக்குமா? யாருக்கு சிக்கல்?