வங்கதேசத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்புகள்! பலி எண்ணிக்கை 92 ஆக உயர்வு!
கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!
மென்பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்க நெல்லை நீதிமன்றத்தில் சிபிசிஐடி இன்று (ஆக. 6) மனுத்தாக்கல் செய்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த மென்பொறியாளா் கவின் செல்வகணேஷ் கடந்த ஜூலை 27-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா்.
வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்துவந்ததால், காதலியின் சகோதரர் சுர்ஜித், கவினை வெட்டிப் படுகொலை செய்துள்ளார். பின்னர், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோருக்கு இந்த கொலையில் சம்மதம் இருப்பதாக புகார் தெரிவித்த கவினின் பெற்றோர், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலைப் பெற மாட்டோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 5 நாள்கள் போராட்டத்துக்குப் பிறகே கவினின் உடலைப் பெற்றுக்கொண்டனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து, சுர்ஜித்தின் பெற்றோரை இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் சேர்த்தனர். வழக்கின் விசாரணை காரணமாக அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்த வழக்கை, சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது வழக்கு விசாரணைக்காக சுர்ஜித் மற்றும் அவரின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்துள்ளது.
நெல்லை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | விஜயகாந்த் புகைப்படத்தை எந்தக் கட்சியும் பயன்படுத்தக் கூடாது! - பிரேமலதா