Top News: `திருப்பூர் SSI கொலை டு இந்தியா மீது 50% வரி போட்ட ட்ரம்ப்' - ஆகஸ்ட் 6...
Uttarakhand: உத்தரகாசியில் ஏற்பட்டது மேக வெடிப்பா? - உண்மை என்ன? - விளக்கும் பிரதீப் ஜான்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருக்கின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. பல வீடுகள், ஹோட்டல்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன.
திடீரென வந்த இந்த காட்டாற்று வெள்ளத்திற்கு மேகவெடிப்புதான் காரணம் என்று சில தகவல்களும், மேக வெடிப்பு காரணமில்லை என்று சில தகவல்களும் வெளியாகி இருக்கிறது. உண்மை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும், மேகவெடிப்பு என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜானைத் தொடர்புகொண்டு பேசினோம்.

மேகவெடிப்பு குறித்து பேசிய அவர், “ பொதுவாக மேகவெடிப்பு என்பதற்கு சரியான வரையறை கிடையாது. மேகவெடிப்பு என்பது குறுகிய நேரத்தில் அதிக கனமழை பெய்வதைதான் மேக வெடிப்பு என்று சொல்கிறார்கள். நேற்று(ஆகஸ்ட் 5) உத்தரகாண்டில் எல்லா இடங்களிலும் கனமழை பெய்திருக்கிறது.
குறிப்பாக ஹரித்வாரில் மட்டும் 303 மி.மீ மழை பெய்திருக்கிறது. இரண்டு நாட்களாக அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதனால் உத்தரகாண்டில் நடந்ததை மேக வெடிப்பு என்று சொல்லமுடியாது. 100 மி.மீ க்கு அதிகமாக மழை பெய்தால் அவை மேக வெடிப்பு என்று இந்திய வானிலை ஆய்வு வரையறுத்திருக்கிறது. ஆனால் இதனை உறுதியாக எடுத்துக்கொள்ள முடியாது.

உதாரணத்திற்கு மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாதாரணமாகவே 100 மி.மீ க்கு மேல்தான் பெய்யும். தமிழ்நாட்டிலேயே 100 மி.மீ க்கு அதிகமாக மழை எல்லாம் பெய்திருக்கிறது. அதனை எல்லாம் மேகவெடிப்பாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. 2010- லடாக்கில் ஏற்பட்ட மேகவெடிப்பில் 500-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருந்தார்கள்.
அங்கு ஒரு வருடத்திற்கே 100 மி.மீ மழைதான் பெய்யும். ஆனால் அந்த சமயத்தில் 2 மணிநேரத்தில் 200 மி.மீ மழை பெய்தது. குறுகிய நேரத்தில் அதிக மழை பெய்திருக்கிறது. இதுதான் மேகவெடிப்பு. வெள்ளம் வந்தாலே மக்கள் மேகவெடிப்பு என்று சொல்லிவிடுகிறார்கள். ஆனால் அப்படி கிடையாது. 2013-உத்தரகாண்டிலும், 2023-ல் இமாச்சல் பிரதேசத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. மேகவெடிப்பு என்பது அந்த ஊர்களின் காலநிலையை பொறுத்துதான் நிகழும்” என்று விளக்கம் அளித்தார்