பாகிஸ்தானில் தீவிரமடையும் பருவமழை! மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!
பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில், ஆக.5 முதல் 8 ஆம் தேதி வரை பருவமழை தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது. மேலும், வடக்கு பாகிஸ்தானில் மேற்கு நோக்கிய தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், அப்பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், அந்நாட்டின் சிந்து, செனாப் மற்றும் ரவி உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகக் கூடும் எனக் கூறப்படுகிறது.
கனமழை நீடித்தால், காபுல், ஸ்வாட் மற்றும் பஞ்கோரா ஆகிய ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதனால், கனமழை நீடித்தால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த, ஜூன் 26 ஆம் தேதி முதல், பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் பஞ்சாப், பலூசிஸ்தான், கைபர் பக்துன்குவா உள்ளிட்ட மாகாணங்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது.
இதில், தற்போது வரை 299 பேர் பலியானதுடன், 715 பேர் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வாசிம் ஜாஃபர் - மைக்கேல் வாகன் மோதல்! கிரிக்கெட் சண்டையையும் டிரம்ப் நிறுத்தினாரா?