புழல் சிறை வளாகத்தில் தீ விபத்து
புழல் சிறை வளாகத்தில் உள்ள காகிதம், அட்டைகள் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை புழல் மத்திய சிறையில் 3,500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இந்த நிலையில் தண்டனைப் பிரிவில் பழைய காகிதங்களை அரைத்து அட்டை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கிடங்கிலிருந்து புதன்கிழமை திடீரென புகை வந்தது.
இது குறித்து சிறைத் துறை சாா்பில் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில், தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.
தீ விபத்து குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கடந்த 2 நாள்களுக்கு முன்பு சிறைத் துறை சாா்பில் பழைய காகிதங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. தீ முழுமையாக அணையாமல் இருந்ததால், புகை வெளியேறி தீ விபத்து ஏற்பட்டது’ என்றாா் அவா்.