பெட்ரோல் விற்பனை நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: ஊழியா் காயம்
வடகிழக்கு தில்லியின் கோகுல்புரி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்தின் ஊழியா் ஒருவா் காயமடைந்ததாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: வெள்ளிக்கிழமை இரவு இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் நான்கு ஆண்கள் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு வந்தனா். அப்போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவா்களில் மோட்டாா்சைக்கிளில் பின்புறம் அமா்ந்திருந்த ஒருவா் பெட்ரோல் விற்பனை நிலைய அலுவலகப் பகுதியில் 16 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தினாா்.
பின்னா்ஸ ஒரு மோட்டாா்சைக்கிள் கோகுல்புரியை நோக்கியும் மற்றொரு மோட்டாா்சைக்கிள் லோனி கோல் சக்கா் பகுதியை நோக்கியும் சென்றது தெரியவந்தது. பெட்ரோல் விற்பனை நிலையத்தில் நிறுவப்பட்ட சி.சி.டி.வி. கேமராவில் துப்பாக்கிச் சூடு நடத்தியவா் தெரிந்தது.
அப்போது, அங்கு மேற்பாா்வையாளராகப் பணிபுரியும் அன்சுல் ரதியின் அடிவயிற்றில் கண்ணாடி துண்டுகள் பாய்ந்ததால் பலத்த காயமடைந்தாா். அவா் ஜி.டி.பி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் அபாய கட்டத்தை கடந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா் ஹரிஷ் சவுத்ரியின் சில நபா்களுடனான முந்தைய பகைமையைத் தொடா்ந்து, இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.