இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; முகமது ஷமி அணியில் சேர்ப்பு!
பெண்களைக் கருத்தரிக்க வைக்கும் வேலை: இளைஞர்களிடம் பண மோசடி செய்த கும்பல் கைது!
பிகாரில் குழந்தை இல்லாத பெண்களைக் கருத்தரிக்க வைத்தால் பணம் தருவதாகக் கூறி பல இளைஞர்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
பிகாரின் நவாடா மாவட்டத்தில் போலா குமார், ராகுல் குமார், பிரின்ஸ் ராஜ் ஆகிய 3 பேர் கொண்ட கும்பல் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வேலை வாய்ப்பு தொடர்பாக ஒரு விநோத விளம்பரத்தைப் பதிவிட்டுள்ளனர்.
அந்த விளம்பரப் பதிவில் குழந்தையில்லாதப் பெண்களைக் கருத்தரிக்க வைத்தால் அதற்கென அதிகளவில் பணம் தருவதாகக் குறிப்பிட்டனர். இதனால், பல இளைஞர்கள் இவர்களின் வலையில் விழுந்தனர்.
இதற்கென அவர்கள் போலியாக உருவாக்கிய நிறுவனத்திற்கு வைத்த பெயர் ‘அகில இந்திய கருத்தரித்தல் வேலை மையம்’. இந்த வேலையில் இணைவதற்கு முன்பணமாக ரூ. 10 லட்சம் செலுத்த வேண்டும். இவர்கள் பதிவிட்ட விளம்பரத்தைப் பார்த்து பலரும் தொலைபேசியில் அழைத்து இந்த வேலையில் இணைய விருப்பம் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | 359 இணைய மோசடி வழக்குகளில் 23 பேர் கைது!
அவர்களிடம் பேன் அட்டை, ஆதார் அட்டை மற்றும் செல்ஃபி எடுத்து அனுப்புமாறு கேட்டு வாங்கிய கும்பல், பின்னர் வேலையைப் பதிவு செய்யவும் ஹோட்டல் முபதிவு செய்யவும் வலையில் விழுந்த நபர்களிடம் பணத்தைப் பெற்றுள்ளனர். இந்தத் திட்டம் தோல்வியடைந்தால் அதற்கு இழப்பீடாக ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்தனர்.
கடந்த ஒரு ஆண்டாக இவ்வாறு பலரையும் ஏமாற்றி வந்த இந்தக் கும்பலை பாதிக்கப்பட்ட நபர்களின் புகாரின் பேரில் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 மொபைல் போன்கள், இளைஞர்களின் புகைப்படங்கள், ஆடியோ பதிவுகள், வங்கி ஆவணங்கள் என அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
”இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இந்தக் கும்பல் வாடிக்கையாளர்களை நம்பவைக்க பெண்களை வைத்து மோசடி செய்தனரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். இதுபோன்று கருத்தரிக்கும் வேலை மோசடியில் மக்கள் இனிமேலும் ஏமாறவேண்டாம்” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
நவாடா மாவட்டத்தில் இதேபோன்ற மோசடியில் கடந்த ஆண்டும் ஒரு கும்பல் ஈடுபட்டு அதில் 8 பேர் கைதாகியது குறிப்பிடத்தக்கது.