விருதுநகர் புதிய ஆட்சியர் அலுவலகம்: முதல்வர் திறந்துவைத்தார்!
தாராவி மேம்பாடு: அதானி குழுமத்திடம் அவசரமாக அளிக்கப்படும் நிலங்கள்!
தாராவி குடிசைப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், மூன்றாவது தவணையாக, தியோனர் குப்பை கொட்டும் நிலப்பகுதியும் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை நடைபெற்ற மகாராஷ்டிர அமைச்சரவைக் கூட்டத்தில், தாராவி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வீடுகள் கட்டுவதற்காக, மும்பையில் உள்ள மிகப்பெரிய குப்பை கொட்டும் இடமான தியோனர் வளாகத்தின் 124 ஏக்கர் நிலப்பரப்பும் அதானி குழுமத்துக்கு ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தாராவி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டிருப்பது இது மூன்றாவது முறையாகும்.
ஏற்கனவே, அக். 10ஆம் தேதி நடைபெற்ற மகாராஷ்டிர அமைச்சரவைக் கூட்டத்தில் தாராவி குடிசைப் பகுதியில் வாழும் மக்களுக்கு வேறு இடங்களில் தங்குமிடம் அமைப்பதற்காக மத் பகுதியில் 140 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பு, செப். 30ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், தாராவி குடிசைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்ட 255 ஏக்கர் நிலம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க.. வரலாற்றை புதுப்பிக்குமா மழை? வேளச்சேரியில் வெள்ளம்!
இதற்கு முன்பு, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் குர்லா பண்ணை நிலத்தில் 21 ஏக்கர் நிலத்தை அதானி குழுமத்துக்கு ஒதுக்க ஒப்புதல் அளித்திருந்ததும் நினைவில் கொள்ளத்தக்கது.
தற்போது ஒதுக்கப்பட்டிருக்கும் தியோனர் குப்பை மேடானது. கடந்த 1927ஆம் ஆண்டு முதல் மும்பையில் பயன்படுத்தப்பட்டு வரும் மிகப் பழமையான குப்பை கொட்டும் இடமாகும். இது கிட்டத்தட்ட 311 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்து காணப்படுகிறது. இதில், 124 ஏக்கரில் குடியிருப்புகள் கட்டப்படவிருக்கின்றன. மீதமிருக்கும் 187 ஏக்கர் நிலப்பரப்பு மும்பை மாநகராட்சியின் வசமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குப்பை கொட்டும் தளத்தில் கிட்டத்தட்ட 20 மில்லியன் டன் குப்பைகளை வெளியேற்ற வேண்டியது இருக்கும். நாள்தோறும் இங்கு 500 - 700 டன் குப்பைகள் இங்கு மாநகராட்சியால் கொட்டப்பட்டு வருகிறது.
தாராவி குடிசை மேம்பாடுப் பகுதிக்காக நிலங்களை ஒப்படைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. முதலில், குப்பை கொட்டும் தளத்திலிருந்து குப்பைகளை அகற்றிவிட்டு நிலப்பரப்பை ஒப்படைப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது எப்படி இருக்கிறதோ அப்படியே குப்பை கொட்டும் வளாகம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டு காலமாக குப்பைகளால் நிரம்பிய நிலப்பரப்பில் வீடுகள் கட்டப்படுவது குறித்து சமூக ஆர்வலர்களும், சுற்றுச்சூழலியல் துறையினரும் கவலை தெரிவித்திருக்கிறார்கள். இந்த திட்டத்தை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால், விரைவில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படவிருப்பதால், மாநில அரசு அவசர அவசரமாக நிலங்களை அதானி குழுமத்துக்கு ஒதுக்கும் பணிகளில்தான் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.