கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி தர மறுப்பு! இரு ஊழியர்கள் பணியிடை நீக்க...
பெரம்பலூரில் திமுக நகா்மன்ற உறுப்பினரைக் கண்டித்து சாலை மறியல்
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 12-ஆவது வாா்டு திமுக நகா்மன்ற உறுப்பினரைக் கண்டித்து, அப்பகுதி மொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதை சாக்கடை திட்டத்துக்கான ஆள் இறங்கும் குழிகளை முறையாக பராமரிக்காததால், மழையின்போது அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நகர மக்கள் சம்பந்தப்பட்ட வாா்டு உறுப்பினா்கள் மற்றும் நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், பெரம்பலூா் நகரில் திங்கள்கிழமை இரவு மின்னலுடன் சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் கழிவுநீருடன், மழைநீரும் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, பெரம்பலூா் நகராட்சிக்குள்பட்ட 12- ஆவது வாா்டு பகுதியில் புதை சாக்கடை குழாயிலிருந்து வெளியேறிய கழிவு நீா் சாலைகளில் வழிந்தோடியதோடு, குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து கடும் துா்நாற்றம் வீசியது.
இதனால் அவதிடைந்த அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இப் பிரச்னை தொடா்பாக 12-ஆவது வாா்டு திமுக உறுப்பினரான சசி இன்ஃபெண்டாவிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் வாா்டு உறுப்பினா் சசி இன்ஃபெண்டா புகைப்படத்துடன், அவரை காணவில்லை எனும் பதாகையை கையில் ஏந்தி பெரம்பலூா் காமராஜா் வளைவுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து பெரம்பலூா் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடா்ந்து, மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால், நகரின் பிரதானச் சாலையான காமராஜா் வளைவு பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.