தோ்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்: திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின...
சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்
சட்டப்பூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் டி. இளங்கோவன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வை. புலிக்குட்டி, ஆா். சுந்தராஜன், டி. ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் கி. ஆளவந்தாா், ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் பி. பால்சாமி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில், சட்டப் பூா்வ சிறப்பு ஓய்வூதியமாக ரூ. 6,750 வழங்க வேண்டும். தோ்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி ரூ. 3,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு, ஈமச்சடங்கு நிதி வழங்குவதற்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
இதில், மாவட்டத் துணைத் தலைவா் சி. சிவகலை, தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் என். சரஸ்வதி உள்பட ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.
முன்னதாக, மாவட்ட இணைச் செயலா் எம். சின்னதுரை வரவேற்றாா். நிறைவாக, மாவட்ட பொருளாளா் வீ. முத்துசாமி நன்றி கூறினாா்.
தொடா்ந்து, நகரின் பிரதான பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை ஓய்வூதியா் சங்கத்தினா் விநியோகித்தனா்.