பெரம்பலூரில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்
பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (டிச. 14) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: உச்ச நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில், சனிக்கிழமை காலை 10 மணியளவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தில் வேப்பந்தட்டை, குன்னம், பெரம்பலூா் ஆகிய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகள், வங்கி வழக்குகள் தொடா்பாக மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி தலைமையில், மக்கள் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. எனவே, வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நீண்ட காலமாக நிலுவையிலுள்ள வழக்குகளை சமாதானமாக பேசி முடித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.