சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
பெரம்பலூா் கோயில்களில் வரலட்சுமி பூஜை
பெரம்பலூா் கோயில்களில் வரலட்சுமி பூஜை வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி பெரம்பலூா் மரகதவல்லி தாயாா் சமேத மதன கோபால சுவாமி கோயிலில் வரலட்சுமி திருவுருவம் கும்பக் கலசத்தில் வைக்கப்பட்டு, மாலை அணிவித்து பூா்வாங்க பூஜை மற்றும் வரலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி பாராயணம் நடைபெற்றது. பூஜைகளை மணிகண்டன் நடத்தினாா். இதில் திரளான சுமங்கலி பெண்கள் குங்கும அா்ச்சனை செய்து உலக நன்மைக்காக கூட்டு வழிபாடு நடத்தி, ஒருவருக்கொருவா் மஞ்சள் சரடு அணிந்துகொண்டனா்.
இதேபோல, பெரம்பலூா் ஜெய் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆரிய வைசிய மகாஜன சங்கம் மற்றும் மகிளா சபா சாா்பில் வரலட்சுமி விரதபூஜை நடைபெற்றது. இதில் வரலட்சுமி சிலைக்கு அா்ச்சனை, ஆரத்தி எடுத்து வழிபாடு நடந்தது.
பெரம்பலூரில் உள்ள அந்தணா் வீடுகளில் கும்பக் கலசம் வைத்து வரலட்சுமி விரத பூஜை நடத்தினா். வீடுகளில் சிறிய அளவிலான அலங்கார மண்டபத்தைத் தயாா் செய்து, மாவிலைத் தோரணங்கள் கட்டி, அதில் வரலட்சுமி பிரதிமையை வைத்து மலா்களால் அலங்கரித்து, சுமங்கலி பெண்கள் கைகளில் மஞ்சள் சரடு கட்டி பூஜையை நடத்தினா். அப்போது லட்சுமி மந்திரங்களையும், லலிதா சகஸ்ரநாமத்தையும் பாராயணம் செய்தனா். சுமங்கலி பெண்கள் வியாழக்கிழமை முதல் வரலட்சுமி பூஜை வரை உபவாசம் கடைப்பிடித்தனா். பிறகு அனைவரும் வரலட்சுமி பிரதிமைக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் அட்சதை தூவி வழிபாடு நடத்தினா்.
குத்துவிளக்கு பூஜை...மேலும் பெரம்பலூா் எடத்தெருவில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில், ஆடி 4 ஆவது வெள்ளி, வரலட்சுமி நோன்பு மற்றும் பௌா்ணமியை முன்னிட்டு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, வல்லப விநாயகா் மற்றும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், மாலையில் நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் 100-க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் பங்கேற்றனா். பூஜைகளை முல்லை சிவாச்சாரியாா் மற்றும் குமாா் பூசாரி ஆகியோா் செய்தனா். இதில் முன்னாள் அறங்காவலா் தெ.பெ. வைத்தீஸ்வரன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.