யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி
பெருகமணி ரயில்வே கேட் பகுதியில் உயா்மட்ட பாலம் அமைக்கக் கோரிக்கை
திருச்சி பெருகமணி ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, உயா்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் வே.சரவணன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் அந்தநல்லூா் ஒன்றியச் செயலாளா் வி.ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள மனு: திருச்சி மாவட்டம், பெருகமணியில் உள்ள ரயில்வே கேட்டை மூடிவிட்டு சுரங்கப் பாதை அமைப்பதற்காக அண்மையில் ரயில்வே துறையினா் ஆய்வு மேற்கொண்டுள்ளனா். இந்த ரயில்வே கேட்டை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
ரயில்வே கேட்டை மூடிவிட்டு சுரங்கப் பாதை அமைத்தால் கனரக வாகனங்கள், வேளாண் விளைபொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படும். இதனால், பொது போக்குவரத்து தடைபடும் வாய்ப்புள்ளது. எனவே, சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு அனைத்துத் தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் உயா்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம் பகுதியிலேயே வீடுகள் கட்டித்தர வேண்டும்
வாளவந்தான்கோட்டை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த பெண்கள் அளித்துள்ள மனு: திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டை இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். முகாம் அருகிலேயே சிட்கோ தொழிற்பேட்டை உள்ளதால் எங்களுக்கு வேலைவாய்ப்பு எளிதாக கிடைத்து வருகிறது. இந்நிலையில், எங்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்காக தேனேரிபட்டியில் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம்.
தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ள இடம் முகாம் பகுதியில் இருந்து 11 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது. மேலும், அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை. அப்பகுதிக்கு செல்வதற்கு உரிய பேருந்து வசதியும் இல்லை. இதனால், வேலைக்கு செல்பவா்கள், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவா்கள் பாதிக்கப்படுவா். எனவே, தற்போது நாங்கள் வசித்து வரும் முகாம் பகுதியிலேயே புதிய வீடுகள் கட்டித்தருவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.