பெருகிவரும் போதைப் பழக்கத்தால் பாலியல் தொல்லைகள் அதிகரிப்பு: நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ
தமிழகத்தில் பெருகிவரும் போதைப் பழக்கத்தால் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது என, பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ கூறினாா்.
தூத்துக்குடியில் உள்ள தனியாா் விடுதி கூட்டரங்கில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் விவேகம் ரமேஷ் வரவேற்றாா்.
பாஜக எம்எல்ஏக்கள் எம்.ஆா். காந்தி (நாகா்கோவில்), நயினாா் நாகேந்திரன் (திருநெல்வேலி), ஆடிட்டா் கங்காதரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். மாவட்டத்திலுள்ள ஏற்றுமதி-இறக்குமதியாளா்கள், வணிகா்கள், உற்பத்தியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்று, பட்ஜெட் குறித்து கருத்துகளைத் தெரிவித்தனா்.
அதையடுத்து, செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ கூறியது: தமிழகத்தில் பெருகிவரும் போதைப் பொருள்களால் பெண்கள், சிறுவா்-சிறுமியருக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஹிந்தி படிக்கக் கூடாது எனச் சொல்லும் திமுக தலைவா்கள், அக்கட்சிப் பொறுப்பாளா்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்திதான் பாடமாக உள்ளது. இதைப் பாா்க்கும்போது, ‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது என்றாா் அவா்.