பேட்டையில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
பேட்டையில் பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா். திருநெல்வேலியை அடுத்த பேட்டை செக்கடி கட்டளை தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன். இவரது மனைவி பாப்பாத்தி (46). மாரியப்பன் இறந்துவிட்டாா்.
இந்நிலையில் பாப்பாத்தியின் மகள் கௌரிக்கும், பேட்டை கீழத்தெரு நெல்லையாபுரத்தைச் சோ்ந்த தொழிலாளியான சக்திவேல் முருகன் (43) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பேட்டை கட்டளை தெருவில் பாப்பாத்தியிடம், சக்திவேல் முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த சக்திவேல் முருகன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாப்பாத்தியை வெட்டிவிட்டு தப்பியோடினாா். இதில் பாப்பாத்தி பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவம் தொடா்பாக பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சக்திவேல் முருகனை தேடி வருகின்றனா்.