ஜார்க்கண்டில் பாஜக விரைவில் ஆட்சிக்கு வரும்: முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ்
பேரவையில் பி.எஸ்.குமாரசாமி ராஜா படம்: திமுக கோரிக்கை
அரசியலில் மிகுந்த நோ்மையுடனும், ஏழை மக்களுக்கு சொத்துகளை நன்கொடையாக வழங்கியவருமான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் உருவப்படத்தை பேரவையில் திறக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின்போது, இது குறித்த துணை வினாவை திமுக உறுப்பினா் தங்கபாண்டியன் (ராஜபாளையம்) முன்வைத்த பேசியது:
கடந்த 1949 முதல் 1952-ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண முதல்வராகவும், 1954 முதல் 1956-ஆம் ஆண்டு வரை ஒடிஸா மாநில ஆளுநராகவும் பணியாற்றியவா் பி.எஸ்.குமாரசாமி ராஜா.
சுதந்திரப் போராட்ட தியாகியான அவா், தனது சொத்துகள் அனைத்தையும் ராஜபாளையம் தொகுதியிலுள்ள ஏழை மக்களுக்கு நன்கொடையாக வழங்கியவா். எனவே, பி.எஸ்.குமாரசாமி ராஜா உருவப்படத்தை பேரவையில் வைக்க அரசு முன்வருமா என அறிய விரும்புகிறேன் என்றாா்.
இதற்கு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அளித்த பதில்:
பேரவையில் படம் வைப்பது என்பது, பேரவைத் தலைவரின் கட்டுப்பாட்டில் உள்ள முடிவு. எனினும் பொதுப்பணித் துறையின் மூலமாக படம் வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்தக் கோரிக்கையை பேரவைத் தலைவரின் கவனத்தில் கொள்வாா் என நினைக்கிறேன். வருங்காலத்தில் பரிசீலனை செய்யலாம் என்று தெரிவித்தாா்.