பேராசை பிடித்தவர்கள் இந்திய ரசிகர்கள்..! கோலிக்கு ஆதரவாக முன்னாள் வீரர் கருத்து!
இந்தியாவின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி 500 நாள்களாக சதமடிக்காமல் இருந்து, ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2ஆவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தினார். 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
இதன் மூலம் விராட் கோலி 81ஆவது சதத்தை நிறைவு செய்தார். டெஸ்ட்டில் மட்டும் இது 30ஆவது சதமாகும். மொத்தமாக டெஸ்ட்டில் 119 போட்டிகளில் 9,145 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 48.13ஆக இருக்கிறது.
26 பிஜிடி தொடரில் 2,147 ரன்கள் எடுத்துள்ளதும் 2020க்குப் பிறகு விராட் கோலியின் சராசரி 32.93ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. அடுத்த போட்டி டிச.6இல் தொடங்குகிறது.
இந்த நிலையில் விராட் கோலி குறித்து சுனில் கவாஸ்கர் கூறியதாவது:
நான் வர்ணனையில் சொன்னதுபோல ரோஜர் பெடரர், நோவக் ஜோகோவிச், ரஃபேல் நடால் ஆகியோர் வெற்றி நாயகர்கள். அவர்கள் அரையிறுதியில் தோற்றால் மக்கள் ‘ஃபார்மில் இல்லை’ என்றும் வென்றால் ‘அருமையான செயல்பாடு’ என்பார்கள்.
அதேபோலதான் விராட் கோலியும். தொடச்சியாக சதம் அடித்து பழக்கப்பட்டவர். அவர் சதமடிக்காமல் 70-80 ரன்கள் அடித்தாலும் அது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது. பலரும் விராட் கோலியை ‘பாருங்கள். சரியாக ரன்களை அடிக்கவில்லை’ எனக் கூறுவார்கள்.
இந்திய ரசிகர்கள் மிகவும் பேராசை பிடித்தவர்கள். அவர்களது ஆதர்ஷ நாயகன் 60-70 ரன்கள் அடித்தால் அவர்களுக்கு போதாது. சதமடிக்க வேண்டுமென நினைப்பார்கள். 2023 ஜூலையில் கடைசியாக சதம் அடித்தார். ஆனால், ஜூலை தற்போதுதான் ஒரு வருடம் முன்பு சென்றது என்பதை மறந்துவிடுவார்கள்.
முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் ஆகியதால் விராட் அழுத்தத்தில் இருந்தார். 2ஆவது இன்னிங்ஸில் விராட் கோலி தனது ஸ்டான்ஸை மாற்றியிருப்பார். சிறிதுதான் மாற்றியிருப்பார். ஆனால், அதுவே அவருக்கு மிகப்பெரிய பலனை தந்துள்ளது என்றார்.