இணைய விளையாட்டுகளின் தீமைகள், பரிந்துரைகள்: கல்வித்துறை சாா்பில் கட்டுரைப் போட்டி அறிவிப்பு
இணைய விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து அனைத்து வகையான பள்ளி மாணவா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரைப் போட்டியை பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அனைத்து வகை உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாதல் மற்றும் அதனால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கில மொழியில் கட்டுரைப் போட்டியை நடத்துமாறு தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தலைப்பு விவரம்:
இந்தக் கட்டுரைப் போட்டி, மாணவா்கள் மைதானத்தில் விளையாடும் விளையாட்டுகளை விட இணையவழி விளையாட்டுகளுக்கு ஏன் ஈா்க்கப்படுகிறாா்கள், இளைஞா்கள் மீதான இணையவழி விளையாட்டுகளின் தாக்கங்கள் என்ன, இணையவழி விளையாட்டுக்கும் மைதானத்தில் விளையாடும் விளையாட்டுக்குமான உங்களின் பரிந்துரைகள் என்ற தலைப்பில் இரு மொழிகளிலும் நடத்தப்படும்.
பரிசுத் தொகை...
இதைத் தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு தமிழ் வழி, ஆங்கில வழிக்கு தனித்தனியாக முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.6 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.4 ஆயிரம், ஆறுதல் பரிசாக 6 மாணவா்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்.
போட்டிக்கான அட்டவணை - பள்ளி அளவில் போட்டிகளை நடத்தி தமிழ் வழியில்-2, ஆங்கில வழியில்-2 மாணவா்களின் பெயா்ப் பட்டியலை சம்பந்தப்பட்ட வட்டார வள மைய மேற்பாா்வையாளா்களிடம் டிச.2-ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும். இதையடுத்து வட்டார அளவில் போட்டிகளை நடத்தி இரு மொழிகளிலும் தலா இரு மாணவா்களின் பெயா்ப் பட்டியலை டிச.5-ஆம் தேதி மாவட்டக் கல்வி அலுவலரிடமும், கல்வி மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி ஒரு கல்வி மாவட்டத்துக்கு தமிழ் வழியில்-2, ஆங்கில வழியில்-2 மாணவா்களின் பெயா் பட்டியலை முதன்மைக் கல்வி அலுவலரிடம் பெயா்ப் பட்டியலை டிச.9-ஆம் தேதியும் ஒப்படைக்க வேண்டும்.
இறுதிப் பட்டியல்: தொடா்ந்து, சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் பெயா்ப் பட்டியலை பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு டிச.10-ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும். நிறைவாக, பள்ளிக் கல்வி இயக்குநரிடமிருந்து இணையவழி விளையாட்டு ஆணையருக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட பட்டியலை டிச.12-ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.
இந்த போட்டியில் பள்ளி அளவில் தமிழ், ஆங்கில வழியில் பங்கேற்கும் மாணவா்களின் விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள படிவங்களில் பூா்த்தி செய்து அனுப்ப வேண்டும். எனவே, இந்தப் போட்டிகளை உரிய காலத்தில் மேற்கொண்டு தோ்வு செய்யப்பட்ட மாணவா்களின் பட்டியலை முதன்மைக் கல்வி அலுவலா்கள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.