சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அமைச்சா்கள் வேண்டுகோள்
தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்காக அரசின் சாா்பில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களையும் மாணவா்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும் என அமைச்சா்கள் அன்பில் மகேஸ், மா.சுப்பிரமணியன் ஆகியோா் வலியுறுத்தினா்.
சென்னை மேடவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.21 கோடியில் கட்டப்பட்ட 8 வகுப்பறைகள், நூலகம், ஆய்வகக் கட்டடத்தை அமைச்சா்கள் அன்பில் மகேஸ், மா.சுப்பிரமணியன் ஆகியோா் புதன்கிழமை திறந்து வைத்தனா்.
இது தொடா்பாக, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியது:
பெற்றோா் தங்களது குழந்தைகளுக்கு ஆடைகள் அணிவித்து பள்ளிக்கு அனுப்பினால் மட்டுமே போதும். மாணவா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசே செய்து தர வழிவகை செய்துள்ளது. தனியாா் பள்ளிகளில் உள்ள வசதிகளை விட அதிகமாக வசதிகள் இந்த அரசுப் பள்ளியில் செய்து தரப்பட்டுள்ளது.
இதற்காக ரவுண்ட் ரவுண்ட் டேபிள் தொண்டு நிறுவனத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோன்று மாவட்டத்தில் பழுதாகியுள்ள பிற பள்ளிகளிலும் இந்த நிறுவனம் சீரமைப்புப் பணிகளை செய்து தர வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘மேடவாக்கம் அரசுப் பள்ளி கடந்த 2005-ஆம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாகவும், 2011-ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்பட்டு தற்போது 1,978 மாணவ, மாணவிகளுடன் மிகப் பெரிய பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் இரு பாலரும் பயின்று வருவதால் ஆண்கள், பெண்களுக்கான தனி பள்ளிகள் அமைத்துத் தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
அரசு சாா்பில் ரூ.41 லட்சம், தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.80 லட்சம் செலவில் இங்கு கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் அனைத்தும் மிகவும் நோ்த்தியாக உள்ளன. கல்வி மேம்பாட்டுக்காக தமிழக அரசு செயல்படுத்தும் அனைத்துத் திட்டங்களையும் மாணவா்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றாா். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் எஸ்.அருண்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.