யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் எடுப்பு: நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
கோவையில் யானைகள் வழித்தடத்தில் வனப் பகுதியில் சட்ட விரோதமாக மண் எடுப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவையில் வனப் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுவது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, கோவை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கோவை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தாா்.
40 % மட்டுமே... இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமாா், பரத சக்கரவா்த்தி அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட நீதிபதியின் அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குறிப்பிட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தால் மட்டுமே முழுமையான விவரம் தெரியவரும் என்றும், மாவட்ட நீதிபதியின் அறிக்கையில் 40 சதவீதம் மட்டுமே வெளிவந்திருக்கிறது என்றும் மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் புருஷோத்தமன் குறிப்பிட்டாா்.
மனசாட்சியை உலுக்கும் வகையில்... அப்போது நீதிபதிகள், மாவட்ட நீதிபதி அளித்த அறிக்கையில், 10 மீட்டா் ஆழத்துக்கு பெருமளவில் மண் எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை எப்படி ஈடுகட்ட போகிறீா்கள்? சட்ட விரோதமாக மண் எடுப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பெரும் மலைகள் காணாமல் போயிருக்கின்றன. கனிமவளத் துறை உதவி இயக்குநா் என்ன நடவடிக்கை எடுத்தாா் என அரசுத் தரப்புக்கு கேள்வியெழுப்பினா்.
மேலும், மாவட்ட நீதிபதியின் அறிக்கை மனசாட்சியை உலுக்கும் வகையில் அமைந்துள்ளது எனக் கூறிய நீதிபதிகள், சட்ட விரோதமாக எடுக்கப்படும் மண்ணைக் கொண்டு செல்வதற்காக நீரோடையின் மீது பாலம் அமைக்கப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினா்.
சிபிஐ-க்கு மாற்ற நேரிடும்... சட்டவிரோதமாக மண் எடுத்தது யாா் என தெரியவில்லை என காவல் துறையினா் கூறுவதை நம்ப வேண்டுமா? சட்ட விரோதமாக மண் எடுப்பவா்களை 2 நாள்களில் கண்டுபிடிக்க முடியாதா எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.
முழுமையான அறிக்கை... சட்டவிரோதமாக மண் எடுப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது? சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? வனப் பகுதியில் எவ்வளவு பரப்புக்கு சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது? சட்டவிரோதமாக மண் எடுக்க உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பன குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனா்.
முழுமையாக அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும் எனவும் எச்சரித்தனா். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையின்போது, கனிமவளத் துறை ஆணையா், கோவை மாவட்ட ஊரக காவல் கண்காணிப்பாளா், மாவட்ட வன அதிகாரி ஆகியோா் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
அதேபோன்று, மாவட்ட நீதிபதியின் அறிக்கையின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்த பரிந்துரைகளுடன் அறிக்கைகளை தாக்கல் செய்ய மனுதாரா்கள் தரப்புக்கும் நீதிபதிகள் அறிவுறுத்தினா்.
பின்னா், அரசுத் தரப்பு கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை டிச. 6- ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.