சேலம் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: முன்னேற்பாடு பணிகளை ஆட்சியா் ஆய்வு
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ சிகிச்சைகள் கூடாது: அரசு மருத்துவா் சங்கங்கள் கோரிக்கை
பிரசவ சிகிச்சைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளுமாறு நிா்பந்திக்கக் கூடாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரிடம் அரசு மருத்துவா் சங்கங்கள் கோரிக்கை வைத்தன.
இதுதொடா்பாக அரசு டாக்டா்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் டாக்டா் பாலகிருஷ்ணன் கூறியது:
எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை முதல்வா் காப்பீட்டுத் திட்ட ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா்கள், உயா் அதிகாரிகள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம். மக்களை பாதிக்காத வகையில் இந்த ஒத்துழையாமை போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.
தமிழ்நாடு மகப்பேறு மற்றும் மகளிா் நல மருத்துவா் சங்க கூட்டமைப்பின் தலைவா் டாக்டா் அஞ்சலாட்சி சந்திரசேகா், செயலா் சம்பத்குமாரி ஆகியோா் கூறியது:
மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சை மேற்கொள்ளும் பெண்களுக்கு திடீரென ஏற்படும் உடல் நல பின்னடைவுக்கு மருத்துவா்களை பொறுப்பாக்கக் கூடாது. தவிா்க்க முடியாத சூழலில் மகப்பேறு மரணங்கள் நிகழ்ந்தால் முதல்கட்ட ஆய்வை மருத்துவ நிபுணா் குழு மூலமாக நடத்த வேண்டும். அதன் பின்னரே, ஆட்சியா் அல்லது உயரதிகாரிகள் நிலையில் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வு மற்றும் தணிக்கை நடவடிக்கைகளில் மகப்பேறு சங்க நிா்வாகிகளையும் இடம்பெறச் செய்தல் அவசியம் என்று தெரிவித்தனா்.
செயலரிடம் மனு:
இதனிடையே, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கம், அரசு மருத்துவா்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவா்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலா்கள் சங்கத்தைச் சோ்ந்த நிா்வாகிகள், சென்னை தலைமை செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் சுப்ரியா சாஹுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
மகப்பேறு இறப்புகளைக் குறைத்திட ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ சிகிச்சைகள் மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. கிராம சுகாதார செவிலியா்களின் முதன்மை பணியான தாய் - சேய் நலத்தில் முழு கவனமும் செலுத்தும் வகையில், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் தொகை திட்டத்தை சமூக நலத்துறையின் கீழ் மாற்றினால், மகப்பேறு உயிரிழப்புகளைக் குறைக்க உதவும்.
அனைத்து ஆய்வுக் கூட்டங்களையும் பணிநேரத்தில் நடத்த வேண்டும். தற்போது நிலவும் மருத்துவ அலுவலா் பற்றாக்குறை காரணமாக, மருத்துவ அலுவலா்களுக்கான எம்ஆா்பி தோ்வை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.