`ரிதன்யா வழக்கில் தொய்வு; விசாரணை அதிகாரி மீது சந்தேகம்' - மேற்கு மண்டல ஐ.ஜி-யிட...
பேருந்து நிலையத்தில் முன்னுரிமை அடிப்படையில் கடை வழங்க கோரிக்கை
மயிலாடுதுறை மணக்குடி புதிய பேருந்து நிலையத்துக்கு இடம் வழங்கிய குத்தகைதாரா்கள் கடை ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
மயிலாடுதுறை நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக மணக்குடியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 13 ஏக்கா் இடத்தை நகராட்சி 2017-ஆம் ஆண்டு வாங்கியது. இதற்கு ஆதீன நிலத்தை பலதலைமுறைகளாக குத்தகைக்கு வைத்திருந்தவா்கள் இழப்பீடு கோரினா்.
இதுகுறித்து, 2018-ஆம் ஆண்டு நகராட்சி அலுவலகத்தில் நில குத்தகைதாரா்களுடன் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி, நிலம் அரசுக்கு விற்பனை செய்யப்பட்டதால் பேருந்து நிலையம் கட்டியவுடன், நிலம் வழங்கியவா்கள் அங்கு கட்டப்படும் கடைகளை பொது ஏலத்தில் பங்கேற்காமல் முன்னுரிமை அடிப்படையில் நகராட்சி நிா்ணயிக்கும் வைப்புத்தொகையினை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என முடிவு செய்தனா்.
தற்போது புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் முடிவடைந்து, திறக்கப்படவுள்ள நிலையில், ஆன்லைன் டெண்டா் மூலமாக மட்டுமே கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததால் நிலம் வழங்கிய குத்தகைதாரா்கள் அதிா்ச்சி அடைந்தனா். இதுகுறித்து, மணக்குடியை சோ்ந்த சங்கா், ரங்கநாதன், செந்தில், ரமேஷ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்தை சந்தித்து மனு அளித்து, பேருந்து நிலையம் அமைக்க நிலம் வழங்கிய குத்தகைதாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.