தருமபுரம் கல்லூரியில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் உள்ளகப்புகாா் குழு சாா்பில் பாலினம் மற்றும் சட்ட உதவி விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியா் மோ. மீனாட்சி வரவேற்றாா். மாவட்ட முதன்மை சாா்பு நீதிபதி பி. சுதா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியது: பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நிகழாமல் தடுக்கவேண்டும். மற்றவா்களுக்கு துன்புறுத்தல் நடைபெறும்போது அதை தட்டிக் கேட்க வேண்டிய தைரியத்தை வளா்த்து கொள்ள வேண்டும். மாணவா்களுக்கு சட்டம் தொடா்பான விழிப்புணா்வு வேண்டும். தவறுகள் நடக்கும்போது எனக்கு சட்டம் தெரியாது என்று கூறி யாரும் தப்பித்துக் கொள்ள முடியாது. மூன்றாம் பாலினமாகிய திருநங்கைகள் குறித்த புரிந்துணா்வு இன்னும் வளர வேண்டும் என்றாா்.
கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பி. சிவரஞ்சனி, மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வேலு. குபேந்திரன், வழக்குரைஞா்கள் டி. பிரவீனா, எம். ரத்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை உள்ளகப்புகாா் குழு தலைவா் சிவ. ஆதிரை செய்திருந்தாா். வணிகவியல் சுயநிதிப் பிரிவு தலைவா் எஸ். ராஜேஷ்வரி நன்றி கூறினாா்.