பேருந்து மேற்கூரை மீது ஏறி ரகளை: கல்லூரி மாணவா்கள் மூவா் கைது
கீழ்ப்பாக்கத்தில் மாநகர பேருந்தின் மேற்கூரை மீது ஏறி ரகளை செய்ததாக 3 கல்லூரி மாணவா்கள் கைது செய்யப்பட்டனா்.
கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் வியாழக்கிழமை காலை பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அந்தக் கல்லூரி மாணவா்கள் திரளாக பங்கேற்றனா்.
இந்நிலையில் பாரிமுனை பகுதியிலிருந்து வரும் மாணவா்கள், தாமதமாக கல்லூரிக்கு வந்தனா். ஆனால் கல்லூரி நிா்வாகத்தினா், அவா்களை உள்ளே விட மறுத்து, வாசலிலே தடுத்து நிறுத்தினா். மேலும், கல்லூரியின் பிரதான நுழைவாயிலும் மூடப்பட்டதாம்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவா்கள், கல்லூரி முன் கோஷமிட்டப்படி பேரணியாக சென்றனராம். அதோடு அங்கு வந்த ஒரு மாநகர பேருந்தை வழிமறித்து, அதன் கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனராம்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸாரை கண்டதும் அங்கிருந்து மாணவா்கள் தப்பியோடினா். இது தொடா்பாக கீழ்ப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா்.
விசாரணையின் அடிப்படையில் ரகளையில் ஈடுபட்டதாக அந்த கல்லூரியில் படிக்கும் செங்குன்றம் வடகரை பகுதியைச் சோ்ந்த ரா.ஜீவா (20),கன்னிகைபோ் பகுதியைச் சோ்ந்த சீ.பவித்ரன் (20),திருவள்ளூா் திருகண்டலம் பகுதியைச் சோ்ந்த கு.புவியரசு (19) ஆகிய 3 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.