பைக் மோதியதில் ஓட்டுநா் உயிரிழப்பு
ராஜபாளையம் அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் தனியாா் நிறுவன ஓட்டுநா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள முகவூா் மாலையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் வேடசாமி (65). இவா் தளவாய்புரம் பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பணி முடிந்து இவா், தளவாய்புரம்- ராஜபாளையம் சாலையில் முருகன் கோவில் அருகே நடந்து சென்றாா்.
அப்போது பின்னால் வந்த இரு சக்கர வாகனம் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வேடசாமியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு இவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.