லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத்தீ: உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு..!
பொங்கல் தரிசனம்: 12 சூரியன்கள், ஸ்படிக வழிபாடு - வியக்க வைக்கும் சூரிய தகவல்கள்
சூரிய வழிபாட்டுக்கு மிக உகந்த நாள் தைப்பொங்கல் திருநாள். அன்று ஆன்ம காரகனான சூரியதேவனை வழிபடுவதால், நீண்ட ஆயுள் கிடைக் கும். நோயில்லா வாழ்க்கை வரமாகக் கிடைக்கும்; சூரிய கடாட்சத் தால் செல்வம் பெருகும். அவரைப் போற்றும் விதமாக சில சூரியத் தகவல்கள் இங்கே உங்களுக்காக!
கிரேக்கர்களும் ரோமானியர்களும் அறிவு, கவிதை, கணிதம், சிகிச்சை ஆகியவற்றுக்கான கடவுளாக, அப்பல்லோ என்ற பெயரில் சூரியனை வழிபட்டனர். இங்கிலாந்து, ஆஸ்திரியா, ஸ்பெயின் ஆகிய தேசங்களில் அவருக்கு ‘பெலினஸ்’ என்று பெயர். நமது புராணங்கள் ஞானம், பேராற்றல், அழகு ஆகியவற்றின் உறைவிடமாகவும், பல்வேறு வியாதிகளைப் போக்கி, நீண்ட ஆயுள் தரும் தேவனாகவும் சூரியனைப் போற்றுகின்றன.
சிவனடியார்கள் சூரியனை சிவசூரியன் என்று போற்றுவார்கள். சாந்தோக்ய உபநிஷத்தும், தைத்ரிய சம்ஹிதையும் சிவபெருமான் சூரிய மண்டலத்தில் விளங்குவதைச் சிறப்புடன் குறிப்பிடுகின்றன.
அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில்
அருக்கனாவான் அரன்வுரு அல்லனோ
இருக்கு நான்மறை ஈசனையே தொழும்
கருத்தினை நினையார் கன்மனமாவரே
என்கிறது தேவாரப்பாடல் (திருநாவுக்கரசர் ஆதிபுராணக் குறுந்தொகை). ‘மாலை நேரத்தில் சூரியனை (அருக்கன் சூரியன்) அனைவரும் வணங்குகின்றனர். அந்தச் சூரியவடிவம் சிவபெருமான் அல்லவோ? ரிக் முதலான நான்கு வேதங்களும் ஈசனையே தொழுகின்றன. இதை அறியாதவர் கல் மனம் கொண்ட மூடர் அல்லவா?’ என்பதே இப்பாடலின் கருத்து.
வைணவ மரபில், சூரிய பகவானை சூரியநாரயணராகப் போற்றுவர். தை மாதம் அமாவாசையை அடுத்த ஏழாம் நாளான ரத சப்தமி திருநாளை, இவருக்கு உகந்த நாளாகச் சிறப்பிப்பார்கள். இந்தத் தினத்தில் பெரும்பாலான பெருமாள் திருத்தலங்களில் ஏகதின பிரம்மோற்ஸவம் நடைபெறும். அன்றைக்கு மட்டுமே ஸ்வாமி ஏழு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்தத் திருநாளில் மிகப் பொலிவுடன் திகழும் சூரிய நாராயணரை வழிபடுவது மிக விசேஷம்.
சூரியனைப் பன்னிருவராக விளக்குகின்றன புராணங்கள். இவர்கள், சிவனருளால் உதித்த ஆதித் தீ (முதலில் தோன்றிய தீக்கோளம்) எனும் பொருள்பட ஆதித்யர்கள் எனப்பட்டனர். பன்னிருவர் என்பதால் பன்னிரு ஆதித்யர்கள் அல்லது துவாதச ஆதித்யர் என்று அழைப்பர்.
இந்தப் பன்னிரண்டு சூரியர்களின் பெயர்கள் குறித்த விவரம் வெவ்வேறுவிதமாகச் சொல்லப்படுகிறது. வழக்கில் அதிகமாக உள்ள பன்னிரு சூரியர்கள் குறித்த பெயர்கள்: வைகர்த்தன், விவச்சுதன், பகன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப் பிரகாசன், லோகசாக்ஷி, திருவிக்ரமன், ஆதித்தன், திவாகரன், அங்கிசமாலி. சைவர்கள் பெரும்பாலும் இந்தச் சூரியர்களையே போற்றி வழிபடுகின்றனர். இவர்கள் ‘சிவாதித்யர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். வைணவ மரபில் இந்தப் பன்னிருவரை ‘கேசவாதித்யர்கள்’ என்று குறிப்பிடுவர்.
சூரியனுக்கு உரிய கற்களில் தலைசிறந்தது ஸ்படிகம். எனவே, சிவசூரியனாக விளங்கும் சிவபெருமானை ஸ்படிகக் கல்லில் லிங்கமாகச் செய்து வழிபடும் வழக்கம் உண்டு. ஸ்படிக லிங்கத்தை வழிபடுவதால் இம்மையில் ஞானமும், மறுமையில் மோட்சமும் கிடைக்கும். எனவே, ஞானாசார்யராக விளங்கும் துறவிகள் ஸ்படிக லிங்கத்தைப் பூஜை செய்கின்றனர்.
ஸ்படிக லிங்கத்தை இல்லறத்தார் பூஜித்தால் ஞானமும், பொருட் செல்வமும் உண்டாகும் என்பார்கள். சிதம்பரம், காளஹஸ்தி, ராமேஸ்வரம் ஆகிய தலங்களில் ஸ்படிக லிங்கங்கள் நித்ய பூஜையில் சிறப்புடன் வழிபடப்படுகின்றன.
சூரிய மண்டலத்தில் சிவசக்தி வடிவமாக, அர்த்தநாரீஸ்வர கோலத்தில் சிவனார் அருள்வதாகவும் ஞானநூல்கள் கூறுகின்றன. இதனைக் குறிக்கும் வகையில், பல ஸ்படிக லிங்கங்களில் ஒரு பக்கத்தில் மட்டும் சிவப்பு அல்லது கருநீல நிறம் இயற்கையாகவே படிந்திருக்கும். இவற்றை, அர்த்தநாரீஸ்வர ஸ்படிக லிங்கங்கள் என்று அழைப்பார்கள்.
அருணகிரிநாதரின் திருவகுப்பு பாடலில், முருகப்பெருமானின் திருவடிப் பெருமைகளை விளக்கும் ‘சீர்பாத வகுப்பு’ எனும் தலைப்பின் கீழ் வரும் பாடலில், ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் உலா வரும் சூரியனை, ‘எழுபரிரதத்து இரவி’ எனக் குறிப்பிடுகிறார் அருணகிரியார். சிவப்பு, பச்சை முதலிய ஏழு நிறக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் கதிரவன் காட்சி தருகிறான் என்கிறார். இப்படி மெய்ஞ்ஞான நூல்கள், ஏழு குதிரைகள் குறிப்பிடுவதையே, விஞ்ஞானமும், ‘VIBGYOR’ என ஏழு வண்ணங் களாகக் குறிப்பிடுகிறது.
மெய்ஞ்ஞானம் சூரிய நமஸ்காரத்தையும், சந்தியாவந்தனத்தையும் தினசரி வழிபாடாகச் சொல்கிறது. விஞ்ஞானமோ, சூரிய ஆற்றல் (Solar power) மேலான சக்தி எனப் போற்றுகிறது.
சந்தியாவந்தனம் என்பது, உதய காலத்தில் சூரியன் ரதத்தில் புறப்படும் நேரத்திலும், அவன் நடுஉச்சியில் சுடர்விடும் நேரத்திலும், மாலையில் ரதம் விட்டு இறங்கும் நேரத்திலும் நாம் செய்ய வேண்டிய ஒரு கடமையாகும். இதையே, ‘காணாமல் கோணாமல் கண்டு’ என ஒரு பழமொழி விளக்குகிறது.
‘ஞாயிறு ஆயிரம்’ என்று வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் கதிரவனைப் பற்றி பாடியுள்ளார். அனுமனுக்கு ஆசிரியராக ஆதித்தன் விளங்குவதை, ‘ஒப்பில் மாருதிக்கு ஒன்பது இலக்கணம் செப்பி ஆண்ட திவாகர மூர்த்தியே’ - எனப் போற்றி மகிழ்கிறார்!