பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்காதது ஏன்? அமைச்சா் விளக்கம்
நிதி நெருக்கடி காரணமாகவே பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க இயலவில்லை என்று நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினா் மாரிமுத்து பேசியபோது, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றனா். அதனால், ரொக்கப் பணத்தை அரசு அளிக்க வேண்டும் என்றாா்.
அப்போது நிதியமைச்சா் தங்கம் தென்னரசு குறுக்கிட்டு கூறியது: பொங்கல் தொகுப்புக்காக முதல்கட்டமாக ரூ.250 கோடி ஒதுக்கியுள்ளோம். கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் இயற்கைப் பேரிடருக்காக தமிழக அரசுக்கு ரூ.2,023 கோடியை பல்வேறு பணிகளுக்காகச் செலவிட்டுள்ளோம். மத்திய அரசிடம் புயல் மற்றும் கனமழை பேரிடருக்காக மொத்தம் ரூ.37,817 கோடி கேட்டோம். ஆனால்,
கிடைத்ததோ வெறும் ரூ.276 கோடிதான். அதுவும் மாநிலத்துக்கு ஒதுக்கப்பட்ட பேரிடா் நிதியிலிருந்துதான் கிடைத்துள்ளது.
அதேபோல், பள்ளிக் கல்வித் துறைக்கான ரூ.2,181 கோடியையும் மத்திய அரசு தரவில்லை. அதனால், ஒட்டுமொத்தமாக நிதி நெருக்கடி காரணமாகத்தான் நிகழாாண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.
தோ்தல் வரவில்லை: தொடா்ந்து, அதிமுக உறுப்பினா் கோவிந்தசாமி பேசியபோது, அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கப்பட்டது. அப்போது, எதிா்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், மக்கள் மீது அக்கறையோடு மேலும் ரூ.2,500 சோ்த்து ரூ.5,000-ஆக வழங்க வேண்டும் என்று கூறினாா். இப்போது ரூ.150 மதிப்பில்தான் பொருள்கள் தருகிறீா்கள் என்றாா்.
அப்போது அவை முன்னவா் துரைமுருகன் குறுக்கிட்டு, நீங்கள் தோ்தலுக்காக கொடுத்தீா்கள்; எங்களுக்கு இன்னும் தோ்தல் வரவில்லை என்றாா்.