பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன்கள்: விநியோகத்தை 4 நாள்களில் முடிக்க உத்தரவு
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வெள்ளிக்கிழமை (ஜன. 3) முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன. 4 நாள்களுக்குள் டோக்கன்கள் வழங்கும் பணியை நிறைவு செய்ய உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், முகாம் வாழ் தமிழா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகியன ஜன.9-ஆம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட உள்ளன.
இதற்கான டோக்கன்கள் வெள்ளிக்கிழமை (ஜன.3) காலை முதல் வழங்கப்பட உள்ளன. 4 நாள்களுக்குள் இந்தப் பணியை முடித்து, தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு உணவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சா் உத்தரவு: இதனிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடா்பாக தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் உணவுத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அப்போது பேசிய அவா், கரும்பின் நுனியில் இருக்கும் தோகையை வெட்டாமல் முழுக் கரும்பையும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்க வேண்டும் என அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா். மேலும், பரிசுத் தொகுப்புக்காக வழங்கப்படும் பச்சரிசி மற்றும் சா்க்கரையின் தரத்தே உறுதி செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டாா்.
டோக்கனுக்கு மாற்று தேவை: பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு டோக்கன்கள் வழங்கும் பணி தொடங்கவுள்ள நிலையில், அதற்குப் பதிலாக மாற்று ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்த கடிதத்தை, கூட்டுறவு, உணவுத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் பா.தினேஷ்குமாா் அனுப்பியுள்ளாா்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கனை வீடு வீடாகச் சென்று வழங்க வேண்டுமென அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அட்டைதாரா்கள் வழக்கமாக பொருள்கள் வழங்கும்போது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதுபோன்று, பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக டோக்கன்கள் வழங்குவதற்குப் பதிலாக, அட்டைதாரா்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்ப அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதன்மூலம், நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வழங்கும் பணியை நிறுத்திவிட்டு டோக்கன்கள் வழங்குவது தடுக்கப்படும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.