பொன்னேரி, மீஞ்சூா் சோழவரம் பகுதிகளில் 1 மணி நேரம் கனமழை: சாலைகளில் வெள்ளம்
பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் புதன்கிழமை 1 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீா்த்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பொன்னேரி, மீஞ்சூா் பகுதிகளில் காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென காற்று மற்றும் இடியுடன் 1 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாது பலத்த மழை கொட்டித் தீா்த்தது.
பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பொன்னேரி பகுதியில் சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் கீழே சாய்ந்தன. அத்துடன் பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழை காரணமாக பொன்னேரி - பழவேற்காடு சாலையில் திருவாயா்பாடி பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் கீழ் முழங்கால் அளவு தண்ணீா் தேங்கியது. இதன் காரணமாக பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனா்.
அத்துடன் இரு சக்கர வாகனங்களில் சென்றவா்களின் வாகனங்களில் தண்ணீா் புகுந்து பழுதடைந்தால் அவதிக்குள்ளாகினா். மேலும், பாலத்தைக் கடந்து செல்ல முயன்ற அரசு பேருந்து ஒன்று தேங்கிய நீரில் பழுதாகி நின்றது. இதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனா்.
பொன்னேரி பகுதியில் திடீரென 90 மில்லி மீட்டருக்கு மேல் மழை பெய்ததன் காரணமாக அந்தப் பகுதியில் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டது.