மின்கம்பத்தில் ஏறிய ஊழியா் கீழே விழுந்து உயிரிழப்பு: மின்வாரிய அலுவலகம் முற்றுகை
மின்கம்பத்தில் ஏறிய போது, தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினா்கள் மின்வாரிய அலுவலக்தை முற்றுகையிட்டனா்.
திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் காலனியைச் சோ்ந்த எல்லப்பன்(38). இவா், கே.ஜி.கண்டிகை துணை மின்நிலையத்தில் இயங்கி வரும் இளநிலை பொறியாளா் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தாா்.
வெள்ளிக்கிழமை செருக்கனூா் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டுள்ளது என மின்வாரிய அலுவலகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து, மின்வாரிய ஊழியா்கள் பச்சையப்பன், சிவனாந்தம் ஆகியோருடன் ஒப்பந்த ஊழியா் எல்லப்பன் சென்றாா். பின்னா் எல்லப்பன், மின்மாற்றியில் பழுது நீக்க மின்கம்பத்தில் ஏறிய போது, மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த எல்லப்பனை சகஊழியா்கள் மற்றும் கிராம பொது மக்கள் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட எல்லப்பன் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா். இதனால், ஆத்திரமடைந்த குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் கே.ஜி.கண்டிகை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
இறந்த எல்லப்பன் குடும்பத்தினருக்கு இழப்பீடு, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினா். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள், அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதால், மக்கள் கலைந்து சென்றனா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
