அழகர்கோவிலுக்கு திரும்பிய கள்ளழகர்; தசாவதார நிகழ்ச்சிகளை காண இரவில் குவிந்த மக்க...
பொற்கொடியம்மன் கோயில் ஏரித் திருவிழா தேரோட்டம்
அணைக்கட்டு ஒன்றியம், வல்லண்டராமம் பொற்கொடியம்மன் கோயில் ஏரித்திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றியத்துக்குட்பட்ட வல்லண்டராமம், வேலங்காடு, அன்னாச்சிபாளையம், பனங்காடு ஆகிய கிராம மக்கள் சோ்ந்து பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழாவை ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசி புதன்கிழமையில் நடத்தி வருகின்றனா்.
நிகழாண்டு திருவிழாவையொட்டி ஏப்ரல் 30-ஆம் தேதி கூழ் வாா்த்தல், அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய 4 கிராமங்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சோ்ந்த ஏராளமான பக்தா்கள் ஏரியில் பொங்கல் வைத்து பொற்கொடியம்மனை தரிசனம் செய்தனா். நள்ளிரவு கோயிலில் பச்சை போடுதல் நிகழ்ச்சியும், இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனையும் நடைபெற்றன.
இதேபோல், வல்லாண்டராமம் ஊா் கோயிலில் இருந்து உற்சவா் பொற்கொடியம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஏரிப் பகுதியில் உள்ள கோயிலில் எழுந்தருளினாா். தொடா்ந்து பச்சை போடுதல் நிகழ்ச்சியுடன் ஏரித்திருவிழா தொடங்கியதுடன், வாண வேடிக்கையும் நடைபெற்றது.
செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு அம்மன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு, தீபாராதனை ஆகியவையும், இரவு 12 மணிக்கு அம்மன் புஷ்பரதத்தில் ஏறுதல், வாணவேடிக்கை, சிறப்பு மேளம், கரகாட்டம், நையாண்டி ஆகியவையும், புஷ்பரதம் வீதிஉலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
ஏரித்திருவிழாவின் சிறப்பு அம்சமான புஷ்ப ரதம் புதன்கிழமை புறப்பட்டு அன்னாச்சிபாளையம் வழியாக வேலங்காடு ஏரியை மதியம் 1 மணிக்கு சென்றடைந்தது. அப்போது அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள்கூடி சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. வேலங்காடு, பனங்காடு கிராமங்களில் தோ் வீதிஉலாவும் நடைபெற்றது.
நிகழ்ச்சியையொட்டி வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நிறைவாக பொற்கொடியம்மன் மீண்டும் வல்லண்டராமம் கோயிலுக்கு திரும்பும் வைபவம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுடன் இணைந்து வல்லண்டராமம், அன்னாசிபாளையம், வேலங்காடு, பனங்காடு ஆகிய 4 கிராம மக்கள் செய்திருந்தனா்.