பெரியதாழையை தனி வருவாய் கிராமமாக தரம் உயா்த்தக் கோரி எம்.பி.யிடம் மனு
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: மே. 13-ல் தீர்ப்பு!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ஆம் ஆண்டு கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து விடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமாா், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், அருண்குமாா், ஹேரன்பால், பாபு ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சிபிஐயும் விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட அரசுத் தரப்பு சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றது.
தொடர்ந்து, மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்ட 9 பேரிடமும் நீதிபதி நந்தினிதேவி விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், இவ்வழக்கில் அரசு தரப்பு மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு விசாரணை நிறைவடைந்த நிலையில், மே 13 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.