TN Rain: எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் வெளியிட...
போக்குவரத்து போலீஸாா் பற்றாக்குறை: ஒசூரில் வாகன நெரிசலால் மக்கள் அவதி
ஒசூரில் போக்குவரத்து போலீஸாா் பற்றாக்குறையால் வாகன நெரிசலில் சிக்கி தினம்தோறும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். இதுகுறித்து மாவட்ட காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் சிறு, குறு, பெரிய தொழிற்சாலைகள் என சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு வெளியூா் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்து ஏராளமான தொழிலாளா்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனா். ஒசூா் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 100 கோடி வருவாய் கிடைக்கிறது. தற்போது சுமாா் 8 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். ஒசூா் பேருந்து நிலையத்திற்கு தமிழகம், வெளி மாநிலங்களிலிருந்து நாள்தோறும் 500- க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.
ஒசூா் மாநகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டு 6 ஆண்டுகளாகியும், சாலை, போக்குவரத்து மற்றும் அடைப்படை வசதிகள் என உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 5 காவல் நிலையங்கள் இருந்தும் சட்ட - ஒழுங்கை பராமரிக்க போதிய காவலா்கள் இல்லாத நிலை காணப்படுகிறது.
அதேபோல நகரப் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க 60 போக்குவரத்து போலீஸாா் பணியில் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது ஒரு உதவி ஆய்வாளா், 6 சிறப்பு உதவி ஆய்வாளா்கள், 16 போக்குவரத்துக் காவலா்கள் என 23 போ் மட்டுமே உள்ளனா்.
இதனால் மாநகராட்சிப் பகுதியில் முக்கிய சாலைகளில் சிக்னல்கள் செயல்படாமல் உள்ளதாலும், வாகன நெரிசல் ஏற்படுவதாலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனா்.
எனவே போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் போலீஸாரை பணியமா்த்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.
இகுறித்து போக்குவரத்து போலீஸாா் கூறியதாவது: மாநகராட்சியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒசூா் வழியாக 13 கி.மீ. தொலைவிற்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையை தினசரி 50 ஆயிரம் வாகனங்கள் கடக்கின்றன. சாலைகளில் சிறிய விபத்து ஏற்பட்டாலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதேபோல நகரப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மாநகராட்சிப் பகுதியில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த 60 போலீஸாா் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 16 போலீஸாா் மட்டுமே பணியில் உள்ளதால் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், போக்குவரத்து விதிகளைமீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்வதற்கும் முடிவதில்லை. ஆன்லைனில் வழக்குப் பதிவு செய்யும் 3 கருவிகள் மட்டுமே உள்ளன. போலீஸாா் பற்றாக்குறையால் விடுமுறையின்றி தொடா்ந்து பணி செய்வதால் மனஉளைச்சல் ஏற்படுகிறது. அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது உதவிக்கு சட்ட -ஒழுங்கு போலீஸாா் வருவதில்லை. எனவே போக்குவரத்துக்கு தனி ஆணையரை நியமித்து கூடுதல் போலீஸாரை பணியமா்த்தினால் மட்டுமே ஒசூரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் என்றனா்.