‘தீயாய் மோதும் கண்கள்..’ கவனம் பெறும் காதல் என்பது பொதுவுடமை பாடல்!
போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால்.. கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
கொச்சி: பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், வழக்கை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்டவரின் சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதில்லை என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவரது நடன ஆசிரியர் மற்றும் மனைவி மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் தாக்கல் செய்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி சிறுமி மற்றும் அவரது தாய் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை அளித்திருக்கிறது.
சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, சிறுமியாக இருந்த தன்னை 2015ஆம் ஆண்டு முதல், பல்வேறு வேளைகளில் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமி காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல், தன்னை திருமணம் செய்துகொள்வதாகவும் நடன ஆசிரியர் உறுதி கொடுத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமி கூறியிருக்கிறார்.
ஆனால், நடன ஆசிரியர் வேறொரு பெண்ணை திருமணம் செய்தபோது, அப்பெண்ணிடம் சிறுமி தங்களுக்குள்ள தொடர்பை தெரியப்படுத்தியும், அப்பெண்ணும் அதற்கு உடந்தையாகவே இருந்ததாகவும் சிறுமி காவல்துறையிடம் கூறியிருக்கிறார்.
சிறுமி, 18 வயதை அடைந்த போது, 2020ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.
இந்தநிலையில், அவரது தாய், பாலியல் வன்கொடுமை தொடர்பான புகாரை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அதனை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. முதற்கட்ட விசாரணையில், போக்சோ சட்டப்பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர் சார்பில், வழக்கை ரத்து செய்யக் கோரும் மனு மீது முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், விசாரணை நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் இந்த வழக்கை நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டது.