போப் இறுதிச் சடங்கு: அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பங்கேற்பு!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவரான போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை(ஏப். 21) மறைந்தாா். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவா்கள், தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
அவரது மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் 3 நாள்களும் தமிழகத்தில் இன்றும் நாளையும் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பேரவை இன்று காலை கூடியதும் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கு நிகழ்வில் தமிழக அரசின் சார்பில் அமைச்சர் நாசர், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், பரிவோடும், முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையினை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்ததாகத் தெரிவித்திருந்தார்.
அதோடு, இன்று (22-4-2025) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மறைந்த போப் பிரான்சிஸுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ். இருதயராஜ் ஆகியோர் கலந்துகொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | உங்கள் உடலுக்கு என்ன தேவை என்று தெரியுமா? இளம்வயதில் உடல்நலப் பிரச்னைகள்! ஏன்?