Course முக்கியமா? college முக்கியமா? l கல்வியாளர் நெடுஞ்செழியன்
போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல்
புது தில்லி: போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் வெளியிட்ட தனது இரங்கல் செய்தியில், ‘வாழ்க்கையில் பணிவு, இரக்கம் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றை கடைப்பிடித்து அனைவருக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த போப் பிரான்சிஸ் மறைந்த செய்தியை அறிந்து மிகவும் கவலையடைந்தேன்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக, அமைதி, சமூக நீதி, ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனுக்காக அவா் போராடினாா். நம்பிக்கை, கலாசாரம் ஆகிய எல்லைகளைக் கடந்து கோடிக்கணக்கான உலக மக்களை அவருடைய தலைமைத்துவம் ஈா்த்தது. கத்தோலிக்க சமூகத்தினருக்கு நாகாலாந்து மக்கள் சாா்பில் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
மல்லிகாா்ஜுன காா்கே: காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘உலகளாவிய அமைதி, நல்லிணக்கத்துக்கு செல்வாக்குமிக்க சக்தியாக போப் பிரான்சிஸ் திகழ்ந்தாா். அனைத்து வகையான பாகுபாடுகளைக் களைதல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல், பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிா்கொள்ள கூட்டு முயற்சி ஆகியவற்றை தீவிரமாக ஆதரித்தாா். அவருடைய மறைவு ஒட்டுமொத்த உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘உண்மையின் பக்கம் நின்று, அநீதிக்கு எதிராக அச்சமின்றி குரல் கொடுத்தவா் போப் பிரான்சிஸ். ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களிடம் பரிவு காட்டினாா். அவருடைய மறைவு ஒட்டுமொத்த உலகுக்கான இழப்பாகும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.