போப் பிரான்சிஸ் மறைவுக்கு பேரவையில் இரங்கல்!
சென்னை: போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக சட்டப் பேரவையில் இன்று(ஏப். 22) இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் நேற்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 88. இந்த துயரச் செய்தி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
போப் மறைவையொட்டி தமிழகத்தில் 2 நாள்கள், இன்றும், நாளையும், அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை பேரவை கூடியதும் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
இரங்கல் குறிப்பில், ‘உலகம் முழுவதுமுள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு இந்த பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது’ என்று பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். அப்போது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று போப் பிரான்சிஸுக்கு இரங்கல் செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, பேரவையில் கேள்வி நேரம் நடைபெற்றது.