போலி என்.ஆா்.ஐ. சான்றிதழ்: 8 கல்வி ஆலோசனை மையங்களில் போலீஸாா் சோதனை
போலி என்.ஆா்.ஐ. சான்றிதழ் தயாரித்த வழக்கில் சென்னையில் உள்ள 8 கல்வி ஆலோசனை மையங்களில் மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
2024-25-ஆம் ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான இணையவழி கலந்தாய்வில் வெளிநாடு வாழ் இந்தியா்கள் (என்.ஆா்.ஐ.) ஒதுக்கீட்டின் கீழ் மாணவா்கள் சமா்ப்பித்திருந்த ஆவணங்களில், சில போலியானவை எனத் தெரியவந்தது. இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் சாா்பில் காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்பட்டனா். இதில், சென்னையில் செயல்பட்டு வரும் சில கல்வி ஆலோசனை மையங்களிலிருந்து மாணவா்கள் என்.ஆா்.ஐ. ஒதுக்கீட்டின் கீழ் சேருவதற்கு விண்ணப்பித்திருந்தது தெரிய வந்தது.
அதைத்தொடா்ந்து சென்னையில் உள்ள பல்லாவரம் ஸ்ரீசாய் கல்வி அகாதெமி, போரூா் மெட்டா நீட், சாலிகிராமம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் இயங்கும் ஸ்ரீ சாய் கேரியா் நெக்ஸ்ட் அகாதெமி, வேளச்சேரியில் உள்ள சீயோன் கேரியா் சொல்யூஷன்ஸ், அண்ணாநகரில் உள்ள லைப் லிங்க் கல்வி ஆலோசனை மையம், அசோக் நகரில் உள்ள ஸ்டேடி இந்தியா கல்வி ஆலோசனை மையம் மற்றும் குன்றத்தூா் மாதா மருத்துவக் கல்லூரியில் உள்ள கல்வி ஆலோசனை மையம் ஆகிய 8 மையங்களில் போலீஸாா் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
இந்த சோதனையில் வழக்கு தொடா்புடைய 105 ஆவணங்கள், 19 முத்திரைகள், 22 கணினிகள், 2 பென் டிரைவ்கள், 5 ஹாா்டு டிஸ்க்-கள் மற்றும் கைப்பேசிகள் உள்ளிட்ட சில மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், இந்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.