போலி கனவுகளை விற்கிறாா் கேஜரிவால்! தில்லி பாஜக கடுமையாக சாடல்
போலி கனவுகளை விற்றுக் கொண்டிருக்கிறாா் கேஜரிவால் என்று தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை விமா்சித்தது.
தில்லி மாநகரில் உள்ள பெண்களுக்கு மாதாந்திர உதவியாக ரூ.1,000 வழங்கும் முக்ய மந்திரி மகிளா சம்மான் யோஜனாவுக்கான பதிவு திங்கள்கிழமை தொடங்கும் என்று
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை அறிவித்த நிலையில், பாஜக இவ்வாறு தெரிவித்தது.
இது தொடா்பாக தில்லி பாஜக தெரிவிக்கையில், ‘தில்லியில் மக்களவைத் தோ்தல் மற்றும் பஞ்சாபில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி இதேபோன்ற வாக்குறுதிகளை அளித்திருந்தது. ஆனால், நிறைவேற்றவில்லை. இதனால், கேஜரிவால் தில்லியில் தவறான கனவுகளை விற்றுக் கொண்டிருக்கிறாா். இது தில்லியில் பெண்களை ஏமாற்ற ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு முயற்சியாகும்’ என்று தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அக்கட்சி எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது: அரவிந்த் கேஜரிவால் உலகின் மிகப்பெரிய மோசடிப் போ்வழி. அவரது வேலை பொய்யான கனவுகளை விற்பதாகும்! அவா் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய வேண்டும்! பஞ்சாப் தோ்தலுக்கு முன், பெண்களுக்கு ரூ.1000 தருவதாக கூறியவா், தோ்தல் முடிந்து, இன்று வரை, ஒரு ரூபாய் கூட தரவில்லை. மக்களவைத் தோ்தலுக்கு முன் தில்லியில் ரூ.1,000 தருவதாக கூறியிருந்தாா். ஆனால் இன்று வரை கொடுக்கவில்லை’ என்று பாஜக தெரிவித்துள்ளது.
முன்னதாக, தில்லியில் தனது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க சஞ்சீவனி யோஜனா தொடங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி மேலிடம் அறிவித்திருந்தது.
கடந்த தோ்தலில் தில்லியின் 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றியிருந்தது.
இந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தில் தொடா்ந்து நீடிக்கும் முயற்சியாக வரவிருக்கும் தில்லி பேரவைத் தோ்தலில் அக்கட்சி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறது.