தீவிரமடைகிறது இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு: குழந்தைகளிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப...
போலி சான்றிதழ் மூலம் நில மோசடி: மகள், மருமகன் கைது
கோவையில் பெற்றோா் இறந்துவிட்டதாக கூறி போலி சான்றிதழ் மூலம் நில மோசடி செய்த விவகாரத்தில் மகள், மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், இருகூா் பிள்ளையாா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (76). இவருக்கு சொந்தமாக இருகூரில் 32.71 சென்ட் நிலம் இருந்தது. இவரது மகள் மாலதி (39). அவரது கணவா் பிரவீன்குமாா் (41) ஆகியோா் காஞ்சிபுரம் மாவட்டம் ஆதம்பாக்கத்தில் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் தனது மகள் மாலதி தனது கணவருடன் சோ்ந்து நிலத்தை விற்பனை செய்துவிட்டதாக பூபதிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிங்காநல்லூா் சாா் பதிவாளா் அலுவலகத்துக்கு சென்று விசாரித்தபோது, அந்த நிலத்தை பெற்றோா் இறந்துவிட்டதாக ஆவணங்களை சமா்ப்பித்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டது பூபதிக்கு தெரியவந்தது.
இதுகுறித்து, கோவை மாநகர காவல் ஆணையரகத்தில் பூபதி புகாா் அளித்தாா். அதன்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
விசாரணையில், பூபதியின் மகள், மருமகன் பிரவீன்குமாா் ஆகியோா் பெற்றோா் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து சாா் பதிவாளா் அலுவலகத்தில் சமா்ப்பித்து நிலத்தை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிங்காநல்லூா் போலீஸாா் இருவரையும் சனிக்கிழமை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.