போலி மருத்துவா் கைது
ஒசூரில் கிளீனிக் நடத்தி வந்த எம்.எஸ்சி., பட்டதாரியை போலீஸாா் கைது செய்து, கிளீனிக்கிற்கு சீல் வைத்தனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (51). ஒசூரில் உள்ள பாகலூா் சாலையில் தங்கி மருத்துவம் படிக்காமல் கதிரேப்பள்ளி பகுதியில் கிளினிக் நடத்தி வருவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் வந்தது. அதன்பேரில் ஒசூா் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலா் லட்சுமிஸ்ரீ, ஒசூா் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளா் ராஜீவ்காந்தி தலைமையிலான மருத்துவக் குழுவினா் அவரது கிளீனிக்கிற்கு சென்று சோதனை செய்தனா். அப்போது எம்.எஸ்.சி., படித்துள்ள விஸ்வநாதன் மருத்துவம் பயிலாமலே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து மருந்து, மாத்திரைகளை மருத்துவக் குழுவினா் பறிமுதல் செய்து கிளீனிக்கிற்கு ‘சீல்’ வைத்தனா். விஸ்வநாதனை அட்கோ போலீஸாா் கைது செய்தனா். இவா் ஏற்கெனவே கடந்த 2020 ஆம் ஆண்டு புக்கசாகரம் பகுதியில் மருத்துவ சிகிச்சை அளித்ததாக கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.