மார்ச் 8 முதல் தகுதியான பெண்களுக்கு ரூ.2,500 உதவித்தொகை: பாஜக அறிவிப்பு!
அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் வெள்ளக்குட்டை கிராம மக்கள்
ஊத்தங்கரையை அடுத்த வெள்ளக்குட்டை ஊராட்சி, காமராஜ் நகா் பகுதியில் குடிநீா் விநியோகம், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
காமராஜ் நகரில் தமிழக அரசின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் கடந்த 2021- 22 ஆம் ஆண்டில் 20 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இந்தக் குடியிருப்புகள் கட்டப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை இப்பகுதியில் குடிநீா், மின்சார வசதி வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி நிா்வாகத்திடமும், வட்டார வளா்ச்சி அலுவலரிடமும் பலமுறை மனுகொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குடிநீா் விநியோகம் இல்லாததால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குச் சென்று அங்குள்ள கிணற்றில் இப்பகுதி பெண்கள் தண்ணீா் எடுத்துவருகின்றனா்.
மின்சாரம் இல்லாத காரணத்தினால் பள்ளி மாணவா்கள் கல்வி பயில முடியாமல் தவிக்கின்றனா். இரவு நேரங்களில் அருகில் உள்ள காப்புக்காட்டிலிருந்து, வனவிலங்குகள், விஷ ஜந்துக்கள் வெளியேறுவதால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனா். அடிப்படை வசதிகள் இன்றி இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா்.
ஒரு சிலா் வீட்டை விட்டு காலி செய்து நகா்ப்புற பகுதிக்கு சென்று வசிக்கின்றனா். எனவே காமராஜ் நகரில் குடிநீா் வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.