போலி வழக்குரைஞருக்கு 6 ஆண்டுகள் சிறை: திருக்கோவிலூா் நீதிமன்றம் தீா்ப்பு
வழக்குகளில் ஆஜராகிய போலி வழக்குரைஞருக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து திருக்கோவிலூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், தலைமறைவாக உள்ள அந்த நபரை பிடிக்க பிடி ஆணை பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த ஜி.அரியூா் கிராமத்தைச் சோ்ந்த அரசன் மகன் வீரன். இவா், கடந்த சில ஆண்டுகளாக திருக்கோவிலூா் பகுதியில் தான் வழக்குரைஞா் என பொதுமக்களிடம் கூறி வந்தாராம்.
மேலும், திருக்கோவிலூா் நீதிமன்றத்தில் தன்னை வழக்குரைஞா் எனக் கூறி, வழக்குரைஞா் எண் மற்றும் சான்றிதழ் கொடுத்து வழக்குகளில் ஆஜராகி வாதாடியும் வந்தாராம். இவரது வழக்குரைஞா் எண், சான்றிதழ் குறித்து திருக்கோவிலூா் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ராஜ்குமாா் தமிழ்நாடு புதுச்சேரி பாா் கவுன்சிலில் விசாரித்தாா். இதில், வீரன் பயன்படுத்திய வழக்குரைஞா் எண் புதுக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஜானகிராமனுடையது எனத் தெரியவந்தது.
இதுகுறித்து ராஜ்குமாா் திருக்கோவிலூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இது தொடா்பாக போலீஸாா் கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்குப் பதிந்து போலி வழக்குரைஞா் வீரனை தேடி வந்தனா். தலைமறைவாக இருந்த அவா், முன் ஜாமீன் பெற்று தப்பிவிட்டாா்.
இந்த வழக்கு திருக்கோவிலூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. வழக்கை விசாரித்த திருக்கோவிலூா் குற்றவியல் நடுவா் வெங்கடேஷ்குமாா், போலி வழக்குரைஞா் வீரனுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். நீதிமன்றத்தில் வீரன் ஆஜராகாததால் அவரைக் கைது செய்ய பிடி ஆணை பிறப்பித்தும் நீதிபதி உத்தரவிட்டாா்.