விமான விபத்துக்கு விமானி காரணமா? அமெரிக்க செய்தித்தாளின் கருத்துக்கு ஏஏஐபி எதிர்...
போா் நிறுத்தம் முறிவு: சிரியா ராணுவ தலைமையகத்தில் இஸ்ரேல் தாக்குதல்
சிரியாவின் ஸ்வேய்தா மாகாணத்தில் அறிவிக்கப்பட்ட போா் நிறுத்தம் முறிந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டு ராணுவ தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் கூறியதாவது:
சிரியாவின் தெற்கு நகரமான ஸ்வேய்தாவில், அரசுப் படைகளுக்கும் துரூஸ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட போா் நிறுத்தம் முறிந்தது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை மோதல்கள் தீவிரமடைந்தன.
இதில் துரூஸ் சிறுபான்மை இனத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இஸ்ரேல் ராணுவம் டமாஸ்கஸில் உள்ள சிரிய ராணுவ தலைமையகத்தின் நுழைவாயிலை தாக்கியதுடன், பின்னா் மற்றொரு பெரிய தாக்குதலை நடத்தியது.
மோதல் தொடங்கியதிலிருந்தே தெற்கு சிரியாவில் அரசுப் படைகளின் வாகனங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தொடா் வான்தாக்குதல்களை நடத்திவருகிறது. அத்துடன், எல்லைப் பகுதியில் சிரியா தனது படைகளை வலுப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ஸ்வேய்தாவில் உள்ள துரூஸ் பெரும்பான்மைப் பகுதியில் உள்ள ஆயுதக் குழுக்கள்தான் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட போா் நிறுத்தத்தை மீறியதாகவும், இதனால் அரசுப் படைகள் பதிலடி தாக்குதல் நடத்தியதாகவும் சிரியா பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. “
அந்தப் பகுதியில் வசிப்பவா்களைப் பாதுகாக்கவும், நகரை விட்டு வெளியேறியவா்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்யவும், உரிய விதிகளைப் பின்பற்றி பதிலடி கொடுக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது.
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “‘ஸ்வேய்தா பகுதியிலிருந்து சிரியா அரசுப் படைகள் வெளியேறும் வரை தாக்குதல்கள் தொடரும்; இது அரசுக்குப் புரியவில்லை என்றால், தாக்குதலின் தீவிரம் மேலும் அதிகரிக்கப்படும்’ என்று எச்சரித்தாா்.
கடந்த டிசம்பரில் இஸ்லாமிய கிளா்ச்சிக் குழுக்களின் தாக்குதலால் சிரியாவை நீண்டகாலம் ஆண்டு வந்த பஷாா் அல்-அஸாத் பதவியை இழந்தது ரஷியாவில் தஞ்சமடைந்தாா். அதைத் தொடா்ந்து, 14 ஆண்டுகால உள்நாட்டுப் போா் முடிவுக்கு வந்தது.
ஆனால், புதிய ஆட்சியாளா்கள் நாட்டைக் கட்டுப்படுத்துவதில் சவால்களை எதிா்கொண்டுள்ளனா். பெரும்பான்மையாக உள்ள சன்னி பிரிவு முஸ்லிம்களைக் கொண்ட புதிய அரசில், அஸாத் சாா்ந்துள்ள அலாவி சிறுபான்மையினருடன் பிற ஆயுதக் குழுக்கள் கடந்த மாா்ச் மாதம் மோதலில் ஈடுபட்டனா். அப்போது அரசுப் படைகள் உதவியுடன் நூற்றுக்கணக்கான அலாவி இன மக்கள் கொல்லப்பட்டனா். இது, சிரியாவின் பிற சிறுபான்மை இனத்தவா் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், தெற்கு மாகாணத்தில் உள்ளூா் சன்னி பிரிவு பெதூயின் பழங்குடிகளுக்கும் துரூஸ் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே பரஸ்பர கடத்தல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்தன. அதையடுத்து, சட்டம், ஒழுங்கை மீட்டெடுப்பதற்காக அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்ட அரசுப் படைகள், துரூஸ் குழுக்களுடன் மோதலில் ஈடுபட்டன.
இந்த மோதலில் 30 போ் உயிரிழந்ததாக உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை கூறினாலும், அதற்குப் பிந்தைய புள்ளிவிவரங்கள் அதிகாரபூா்வமாக வெளியிடப்படவில்லை.
பிரிட்டனில் இருந்து செயல்படும் சிரியா மனித உரிமைகள் அமைப்பு கூறுகையில், புதன்கிழமை காலை வரை 250-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டதாகவும், இதில் 4 குழந்தைகள், 5 பெண்கள், 138 பாதுகாப்பு படையினா் அடங்குவதாகவும் தெரிவித்தது.
இந்தச் சூழலில், துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக சிரியா ராணுவ தலைமையகம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏற்கெனவே, அல்-அஸாத் ஆட்சி கவிழ்ந்த பிறகு இஸ்லாமிய கிளா்ச்சியாளா்களால் தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கூறி, சிரியா ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது. அத்துடன், ஐ.நா. கண்காணிப்பில் உள்ள கோலன் குன்றுகள் பகுதியில் உள்ள பாதுகாப்பு மண்டலத்தையும் அந்த நாடு கைப்பற்றியது.
துரூஸ்: ஷியா இஸ்லாத்தின் இஸ்மாயிலியப் பிரிவிலிருந்து கடந்த 10-ஆம் நூற்றாண்டில் துரூஸ் மதப் பிரிவு தோன்றியது. உலகளவில் சுமாா் 10 லட்சம் துரூஸ் மக்கள் உள்ளனா். இதில் பாதிக்கும் மேல் சிரியாவில் வாழ்கின்றனா். மற்றவா்கள் லெபனான், இஸ்ரேல் மற்றும் 1967-இல் இஸ்ரேல் கைப்பற்றி 1981-இல் இணைத்துக்கொண்ட கோலன் மலைக் குன்று உள்ளிட்ட பகுதியில் வாழ்கின்றனா்.
பாலஸ்தீனத்தில் அரபு தேசியவாதிகளால் துரூஸ் மக்கள் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, 1948-ஆம் ஆண்டில் இஸ்ரேல் உருவானபோது அந்த நாட்டுக்கு ஆதரவாக துரூஸ் இனத்தவா் சண்டையிட்டனா். அதற்குக் கைமாறாக, சிரியாவில் உள்ள துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் ராணுவம் தற்போது தாக்குதல் நடத்திவருகிறது.
..இஸ்ரேல் காட்ஸ் படத்துக்கு கோட்ஸ்...
‘ஸ்வேய்தா பகுதியிலிருந்து சிரியா அரசுப் படைகள் வெளியேறும் வரை தாக்குதல்கள் தொடரும்; இது அரசுக்குப் புரியவில்லை என்றால், தாக்குதலின் தீவிரம் மேலும் அதிகரிக்கப்படும்’
- இஸ்ரேல் காட்ஸ், இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா்
