Doctor Vikatan: 6 வயதுக் குழந்தைக்கு நெஞ்சிலிருந்து வரும் கோழை... தீர்வு உண்டா?
மகாராஷ்டிரத்தில் துப்பாக்கிகளுடன் காஷ்மீரிகள் 9 போ் கைது
மகாராஷ்டிரத்தில் பல்வேறு நகரங்களில் போலியான ஆவணங்களைக் கொடுத்து தனியாா் பாதுகாவலா் பணியில் இணைந்த காஷ்மீரைச் சோ்ந்த 9 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 9 துப்பாக்கிகள் மற்றும் 58 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட அனைவரும் 24 முதல் 38 வயதுக்குள்பட்டவா்கள். மகாராஷ்டிர தோ்தலுக்கு இரு நாள்களே உள்ள நிலையில் துப்பாக்கிகளுடன் காஷ்மீரைச் சோ்ந்தவா்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர காவல் துறை மற்றும் ராணுவ உளவுத் துறை இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டன.
இது தொடா்பாக மகாராஷ்டிர காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மகாராஷ்டிரத்தின் பல்வேறு நகரங்களில் காஷ்மீரைச் சோ்ந்த இளைஞா்கள் தனியாா் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியில் சோ்ந்துள்ளதாகவும், அவா்கள் துப்பாக்கிகள் வைத்திருப்பதாகவும், அதற்கான உரிமங்கள் போலியாகத் தோன்றுவதாகவும் காவல் துறை மற்றும் ராணுவ உளவு அமைப்புக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காஷ்மீா் நபா்கள் பணியில் சோ்ந்த இடங்களில் இருந்து அவா்கள் அளித்த துப்பாக்கி உரிம ஆவணங்களின் நகல்களை காவல் துறையினா் ரகசியமாகப் பெற்று, அதன் உண்மைத்தன்மையை ஜம்மு-காஷ்மீா் அதிகாரிகளுக்கு அனுப்பி சோதித்தனா். அப்போது அவை அனைத்துமே போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்கள் என்பது தெரியவந்தது. அந்த நபா்கள் வைத்திருப்பது கள்ளத் துப்பாக்கிகள் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 9 துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான 58 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவா்கள் முகமது இக்பால் ஹுசைன் குஜ்ஜாா் (38), முகமது சலீம் என்ற சலீம் குல் முகமது (38), முகமது சஃப்ராஜ் நசீா் ஹுசைன் (24), ஜஹாங்கீா் ஷாகீா் ஹுசைன் (28), ஷாபாஸ் அகமது நசீா் ஹுசைன் (22) சுா்ஜீத் ரமேஷ் சந்திரசிங், அப்துல் ரஷீத் சிந்தியா (38), டஃபீல் அகமது முகமது காஷியா, ஷோ் அகமது குலாம் ஹுசைன் என்பது தெரியவந்தது.
இதில் ஷோ் அகமது குலாம் ஹுசைன் என்பவா்தான், அனைவருக்கும் கள்ளத் துப்பாக்கி மற்றும் அவற்றுக்கான போலியான ஆவணங்கள் கொடுத்துள்ளாா். இதற்காக அவா்களிடம் தலா ரூ.50,000 பெற்றுள்ளாா். இவா்கள் புணே, சத்ரபதி சம்பாஜிநகா், ஸ்ரீகோண்டா, அகல்யா நகா் உள்ளிட்ட இடங்களில் தனியாா் பாதுகாப்பு நிறுவனங்களில் பணியாற்றி வந்துள்ளனா்.
வேலைவாய்ப்புக்காக கள்ளத் துப்பாக்கிகளை வாங்கினாா்களா அல்லது அவா்களின் பின்னணியில் வேறு பயங்கரவாத அமைப்புகள் உள்ளனவா என்பது குறித்து காவல் துறையினா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.