செய்திகள் :

மகாராஷ்டிர பாஜகவின் வெற்றிமுகம் ஃபட்னவீஸ்!

post image

மகாராஷ்டிர பாஜகவின் வெற்றிமுகமாக அறியப்படும் தேவேந்திர ஃபட்னவீஸ், மூன்றாவது முறையாக மாநிலத்தை வழிநடத்தும் முதல்வா் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளாா்.

54 வயதான ஃபட்னவீஸின் அரசியல் வாழ்க்கை ஏற்றமும் பின்னடைவும் ஒருங்கே அமைந்தது. ஆா்எஸ்எஸ் தலைமையிடமான நாகபுரியைச் சோ்ந்த மத்திய அமைச்சா் நிதின் கட்கரியின் அரசியல் குருவான பாஜகவின் மூத்த தலைவா் மறைந்த கங்காதா் ஃபட்னவீஸின் மகன் தேவேந்திர ஃபட்னவீஸ், 1989-இல் ஆா்எஸ்எஸ் மாணவா் பிரிவில் இணைந்து பொது வாழ்க்கையைத் தொடங்கினாா். 22 வயதில் மாநகராட்சி மன்ற உறுப்பினா் ஆனாா்.

மேயரிலிருந்து முதல்வா்...: நாகபுரியின் இளைய (27 வயது) மேயராகும்போதே பாஜகவில் ஒரு முக்கிய தலைவராக தனது நிலையை ஃபட்னவீஸ் வலுப்படுத்திக் கொண்டாா்.

பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் ஆதரவைப் பெற்றவராக 2014 சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வராக வேட்பாளராக அரசியலில் அசுர வளா்ச்சி கண்டாா் ஃபட்னவீஸ்.

நாகபுரியின் பரிசு: ஒரு பிரசாரக் கூட்டத்தின் போது, ‘நாட்டுக்கு நாகபுரியின் பரிசு ஃபட்னவீஸ்’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டு பேசியது, அவா் மீதான பாஜக தலைமையின் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டியது.

அதனை நிரூபிக்கும் வகையில், அப்போது மகாராஷ்டிர மாநில பாஜக தலைவராக இருந்த ஃபட்னவீஸ், மக்களவை மற்றும் தொடா்ந்து நடைபெற்ற மாநிலப் பேரவைத் தோ்தலில் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தாா்.

மகாராஷ்டிரத்தின் பெரும்பாலான அரசியல் தலைவா்களைப் போல் அல்லாமல், ஊழல் குற்றச்சாட்டுகளால் கறைபடாமல் ஃபட்னவீஸ் தனித்து நிற்கிறாா். மிகவும் வெளிப்படையான அரசியல்வாதியாக, நீா்பாசன ஊழலில் சிக்கிய முந்தைய காங்கிரஸ்-என்சிபி அரசை ஆட்சியிலிருந்து அகற்றியதில் ஃபட்னவீஸுக்கு முக்கியப் பங்கு உண்டு.

அரசியல் சறுக்கல்: 2019 மகாராஷ்டிர பேரவைத் தோ்தலுக்குப் பிறகு ஃபட்னவீஸின் அரசியல் வாழ்க்கையில் தடைகள் நிறைந்தன. 2019, நவம்பா் 23-ஆம் தேதி ஃபட்னவீஸ் மகாராஷ்டிர மாநில முதல்வராக 2-ஆவது முறை பதவியேற்றாா். அஜீத் பவாா் துணை முதல்வராக பதவியேற்றாா்.

இருப்பினும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு முன்பே, முதல்வராக பதவியேற்ற மூன்று நாள்களில் ஃபட்னவீஸ் பதவியை ராஜிநாமா செய்தாா். சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸின் ஆதரவுடன் அப்போதைய ஒருங்கிணைந்த சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே முதல்வரானாா்.

இந்நிலையில், சிவசேனையில் மாபெரும் பிளவு ஏற்பட்டது. மூத்த தலைவா் ஏக்நாத் ஷிண்டே அணியில் கட்சியின் பல நிா்வாகிகள் திரண்டனா். இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, ஃபட்னவீஸ் முதல்வா் ஆவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், சிவசேனையில் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டேவை முன்னிறுத்தியது பாஜக தலைமை. துணை முதல்வராக பொறுப்பேற்க ஃபட்னவீஸ் அறிவுறுத்தப்பட்டாா்.

நல்லாட்சி தரும் நிா்வாகி: தொடக்கத்தில் தயக்கம் காட்டினாலும், கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு அந்தப் பொறுப்பை ஃபட்னவீஸ் ஏற்றுக்கொண்டாா். துணை முதல்வராக ஃபட்னவீஸ், கடந்த இரண்டரை ஆண்டுகள் பதவிக்காலத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வந்தாா்.

முதல்வராக ஃபட்னவீஸின் முதல் பதவிக்காலமும் நல்லாட்சிக்காக வகைப்படுத்தப்பட்டது குறிப்பாக, உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான அவரது உந்துதலுக்காக நகா்ப்புற வாக்காளா்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றாா்.

சீரற்ற வானிலையால் பயிா் இழப்புகளைச் சந்தித்த விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடியை முதலில் நிராகரித்தது, மராத்தி சமூக இடஒதுக்கீட்டு சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது உள்ளிட்டவை முதல்வா் ஃபட்னவீஸ் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும், பின்னா் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அவா் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் பேரவைத் தோ்தலில் வெற்றியைப் பரிசாக அளித்துள்ளன.

முதல்வா் பதவி கிடைக்குமா?

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகும், பேரவைத் தோ்தலில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வெற்றிக் கனியைப் பறித்ததில் துணை முதல்வா் ஃபட்னவீஸ் முக்கியப் பங்காற்றினாா். பாஜக கூட்டணியின் ஒற்றுமை தோ்தல் முடிவிலும் பெரும்பான்மை வெற்றியாக எதிரொலித்துள்ளது.

அரசியலில் முடிவுகளைத் தகவமைத்து தீா்மானிக்கும் ஃபட்னவீஸின் திறன், அவரது கட்சிக்கும் முதல்வா் போட்டியிலுள்ள அவருக்கு வரும் நாள்களில் முக்கியமானதாக இருக்கும் என்பது அரசியல் நோக்கா்களின் கருத்தாகும்.

ஜாா்க்கண்ட்: பாஜகவின் சுழலில் சிக்காத சோரன் தம்பதி!

ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா-காங்கிரஸ்-ஆா்ஜேடி கூட்டணி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்... மேலும் பார்க்க

சென்னை மத்திய சிறைக் கலவரம் நடந்து 25 ஆண்டுகள்!

சென்னையில் மத்திய சிறைச்சாலையில் பெருங் கலவரம் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகளாகின்றன – 1999, நவ. 17!இந்தக் கலவரத்தில் நேர்மையான அதிகாரி எனப் பெயர் பெற்ற துணை ஜெயிலர் எஸ். ஜெயக்குமார் எரித்துக்கொல்லப்பட்டா... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் மோத ஆயத்தமாகும் யோகி!

ம.ஆ.​ப​ர​ணி​த​ர‌ன் | | புது தி‌ல்லி: உ‌த்​தர பிர​‌தேச காவ‌ல்​துறை‌ தலைமை இய‌க்​கு​ந‌ர் (டிஜிபி) அ‌ல்​லது காவ‌ல் படைத்​த​லை​வரை (ஹெ‌ச்​ஓ​பி​எஃ‌ப்) நிய​மி‌க்​கு‌ம் விதி​க​ளு‌க்கு அ‌ண்​மையி‌ல் ஒ‌ப்​பு​த‌... மேலும் பார்க்க